'யுஸ்வேந்திர சாஹல் இந்திய அணியில் இருக்க தகுதியற்றவர்' : முன்னாள் பாக். வீரர் கருத்து
ஆசிய கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி ஆகஸ்ட் 21 அன்று அறிவிக்கப்பட்டது. கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பிசிசிஐ தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் ஆகியோர் 18 பேர் கொண்ட அணியை வெளியிட்டனர். இதில் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அணியின் துணை கேப்டனாக பதவி உயர்வு போற்றார். அதே நேரத்தில் காயத்தால் விலகி இருந்த பேட்டர்கள் கேஎல் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இருப்பினும், யுஸ்வேந்திர சாஹல் அணியிலிருந்து நீக்கப்பட்டது ஒரு விவாதத்தைத் தூண்டியது. பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அவரை புறக்கணித்ததற்காக தேர்வாளர்களை விமர்சித்துள்ளனர். இதற்கிடையே, முன்னாள் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா, சாஹல் இந்திய அணியில் இருக்க தகுதியற்றவர் எனக் கூறியுள்ளார்.
யுஸ்வேந்திர சாஹல் குறித்து டேனிஷ் கனேரியா கூறியதன் முழு விபரம்
முன்னாள் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா, ஆசிய கோப்பையில் இடம் பெற்றுள்ள குல்தீப் யாதவ் சாஹலை விட சிறப்பானவர் எனத் தெரிவித்துள்ளார். மேலும், யுஸ்வேந்திர சாஹல் மிகவும் சீரற்றவராக செயல்படுவதால் இந்திய அணியில் விளையாட தகுதியற்றவர் எனத் தெரிவித்துள்ளார். மறுபுறம், குல்தீப் யாதவ் தொடர்ந்து சீராக விக்கெட்டுகளை எடுத்து வருகிறார் மற்றும் மிடில் ஓவர்களில் அவரால் திறம்பட செயல்பட முடியும் என்றும், இதனால் சாஹலுக்கு பதிலாக குல்தீப் யாதவை தேர்வாளர்கள் தேர்ந்தெடுத்தது சரியான முடிவு என்று கனேரியா தனது யூடியூப் சேனலில் தெரிவித்தார். முன்னதாக, முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், சாஹல் சில போட்டிகளில் மோசமாக தோற்றாலும், ஒயிட்பால் கிரிக்கெட்டில் அவர் சிறந்த வீரர் என்று தெரிவித்தார்.