LOADING...
ஐபிஎல் 2027 தொடரில் யுவராஜ் சிங் புதிய அவதாரம்: டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமனம்?
ஐபிஎல் 2027 தொடரில் யுவராஜ் சிங் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக செயல்படுவார் என தகவல்

ஐபிஎல் 2027 தொடரில் யுவராஜ் சிங் புதிய அவதாரம்: டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமனம்?

எழுதியவர் Sekar Chinnappan
Jun 19, 2026
06:19 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்குப் பெரும் உற்சாகம் அளிக்கும் வகையில், யுவராஜ் சிங் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் புதிய பொறுப்பை ஏற்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் தொடர்களில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, இளம் வீரர்களுக்குத் தனிப்பட்ட முறையில் வழிகாட்டியாக செயல்பட்டு வந்த யுவராஜ் சிங், முதன்முறையாக ஒரு ஐபிஎல் அணியின் அதிகாரப்பூர்வ பயிற்சியாளராகப் பொறுப்பேற்கவுள்ளார். இதுதொடர்பாக வெளிவந்துள்ள நம்பகமான அறிக்கைகளின்படி, ஐபிஎல் 2027 சீசனில் அவர் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக களமிறங்கவுள்ளதாக தெரிகிறது.

நிர்வாக மாற்றம்

டெல்லி அணியின் நிர்வாக மாற்றமும் கங்குலியின் வருகையும்

டெல்லி கேப்பிடல்ஸ் அணியைப் பொறுத்தவரை, அதன் உரிமையாளர்களான ஜிஎம்ஆர் குழுமம் மற்றும் ஜேஎஸ்டபிள்யூ குழுமம் ஆகியவை தலா இரண்டு ஆண்டுகள் சுழற்சி முறையில் அணியின் அன்றாட செயல்பாடுகளைக் கவனித்து வருகின்றன. இதன்படி, கடந்த 2025 மற்றும் 2026 ஆகிய சீசன்களில் ஜிஎம்ஆர் குழுமம் அணியை வழிநடத்தியது. வரும் 2027 மற்றும் 2028 ஆகிய அடுத்த இரண்டு சீசன்களுக்கு ஜேஎஸ்டபிள்யூ குழுமம் டெல்லி அணியின் முழு நிர்வாகக் கட்டுப்பாட்டையும் கையில் எடுக்கவுள்ளது. இந்த நிர்வாக மாற்றத்தின் ஒரு பகுதியாக, ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தின் கீழ் கிரிக்கெட் இயக்குநராக செயல்பட்ட முன்னாள் இந்தியக் கேப்டன் சௌரவ் கங்குலி மீண்டும் டெல்லி அணிக்குத் திரும்புகிறார்.

யுவராஜ் சிங்கிற்கு அழைப்பு

யுவராஜ் சிங்கிற்கு அழைப்பு விடுத்த கங்குலி

டெல்லி அணியின் கிரிக்கெட் இயக்குநராக மீண்டும் பொறுப்பேற்கவுள்ள சௌரவ் கங்குலி, அணியின் ஒட்டுமொத்த பயிற்சிப் பட்டாளத்தையும் மாற்றி அமைக்கத் திட்டமிட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் யுவராஜ் சிங்கின் திறமையை ஆரம்பக் காலத்திலேயே கண்டறிந்து வளர்த்தெடுத்த அவரது முன்னாள் கேப்டனான கங்குலி, டெல்லி அணியின் டக்-அவுட்டிலும் யுவராஜ் இருக்க வேண்டும் என்று விரும்பியுள்ளார். கங்குலியின் இந்த விருப்பத்திற்கு இணங்க, டெல்லி கேபிடல்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க யுவராஜ் சிங் சம்மதித்துள்ளதாக டெல்லி அணியின் மூத்த அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

Advertisement

சுமாரான செயல்பாடு

கடந்த இரு சீசன்களின் சுமாரான செயல்பாடுகள்

டெல்லி கேபிடல்ஸ் அணி கடந்த 2025 மற்றும் 2026 ஆகிய இரண்டு ஐபிஎல் சீசன்களிலும் ஹேமங் பதானி தலைமைப் பயிற்சியாளராக இருந்தபோது கடுமையான சரிவைச் சந்தித்தது. அக்சர் படேல் தலைமையில் களம் கண்ட அந்த அணியில் கே.எல்.ராகுல், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ் போன்ற முன்னணி நட்சத்திர வீரர்கள் இருந்தபோதிலும், அவர்களால் பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற முடியாமல் போனது. 2025 சீசனில் 5வது இடத்தையும், 2026 சீசனில் 6வது இடத்தையும் மட்டுமே டெல்லி அணியால் பிடிக்க முடிந்தது. இந்தத் தொடர் தோல்விகள் காரணமாகவே, ஹேமங் பதானி, வேணுகோபால் ராவ் மற்றும் முனாஃப் படேல் ஆகியோர் அடங்கிய தற்போதைய பயிற்சிப் பட்டாளத்தை ஒட்டுமொத்தமாக மாற்றியமைக்க நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

Advertisement

தனித்துவம்

பயிற்சியாளராக யுவராஜ் சிங்கின் தனித்துவ அனுபவம்

ஐபிஎல் வரலாற்றில் அதிகாரப்பூர்வமாக யுவராஜ் சிங் ஏற்கும் முதல் பயிற்சிப் பொறுப்பு இதுவாகும். இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாகவே அவர் இந்திய அணியின் தற்போதைய கேப்டன் ஷுப்மன் கில், அதிரடி பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா, பிரப்சிம்ரன் சிங் மற்றும் சஞ்சு சாம்சன் போன்ற பல இளம் வீரர்களுக்குத் தனிப்பட்ட முறையில் சிறந்த வழிகாட்டியாக இருந்து அவர்களின் பேட்டிங் திறனை மேம்படுத்தியுள்ளார். வலைப்பயிற்சியின் போது பல மணிநேரம் களத்தில் நின்று வீரர்களின் தவறுகளைச் சரி செய்யும் அவரது தீவிரமான அணுகுமுறை, டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் இளம் பேட்ஸ்மேன்களுக்குப் பெரும் பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement