எம்எஸ் தோனியின் 20 ஆண்டுகால சாதனையை சமன் செய்த 23 வயது இளம் விக்கெட் கீப்பர்
துலீப் டிராபியில் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் துருவ் ஜூரல் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 8) புகழ்பெற்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியின் வியக்கத்தக்க சாதனையை சமன் செய்தார். தற்போது நடைபெற்று வரும் துலீப் டிராபியில் இந்தியா ஏ அணிக்காக விளையாடி வரும் 23 வயதான துருவ் ஜூரல், பெங்களூருவில் நடந்த இந்தியா பி அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக செயல்பட்டார். இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அவர் ஏழு கேட்ச்களை கைப்பற்றினார். இதன் மூலம் துலீப் டிராபி போட்டியின் ஒரு இன்னிங்ஸில் அதிக கேட்ச்கள் எடுத்த தோனியின் 20 ஆண்டுகால சாதனையை சமன் செய்தார்.
ஒரு இன்னிங்ஸில் அதிக கேட்ச்கள்
முன்னதாக, கிழக்கு மண்டலத்திற்காக விளையாடிய தோனி, 2004/05இல் மத்திய மண்டலத்திற்கு எதிராக ஒரு இன்னிங்ஸில் ஏழு கேட்ச்களை எடுத்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்னர், 1973/74இல் மத்திய மண்டலத்திற்காக விளையாடிய சுனில் பெஞ்சமின் மற்றும் 1980/81இல் தெற்கு மண்டலத்திற்காக விளையாடிய சதானந்த் விஸ்வநாத் தலா 6 கேட்ச்களை கைப்பற்றி சாதனையை தங்கள் வசம் வைத்திருந்தனர். நடப்பு துலீப் டிராபியில் விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாக செயல்பட்டாலும், துருவ் ஜூரல் இந்தியா பி அணிக்கு எதிரான இரண்டு இன்னிங்ஸ்களிலும் 2 மற்றும் 0 ரன்களில் ஆட்டமிழந்து பேட்டிங்கில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதற்கிடையே, செப்டம்பர் 19இல் தொடங்கும் வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் இரண்டாவது விக்கெட் கீப்பராக துருவ் ஜூரலும் சேர்க்கப்பட்டுள்ளார்.