பார்ட்னர்ஷிப்பில் புதிய சாதனை படைத்த ஸ்டீவ் ஸ்மித்-டிராவிஸ் ஹெட் ஜோடி
ஓவலில் நடைபெற்று வரும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் அபாரமாக ரன் குவித்து வலுவான நிலையில் உள்ளது. ஆரம்பத்தில் 76 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் இழந்து தடுமாறினாலும், ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் ஜோடி 285 ரன்கள் சேர்த்து ஆஸ்திரேலியாவை வலுவாக்கியது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பார்ட்னர்ஷிப்பில் 100 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் ஜோடி என்ற பெருமையை அவர்கள் பெற்றனர். இருவரும் முதல் இன்னிங்ஸில் தங்கள் சதங்களையும் பூர்த்தி செய்தனர். டெஸ்ட் கிரிக்கெட்டை ஒருநாள் போட்டி போல் ஆடிய டிராவிஸ் ஹெட் 106 பந்துகளில் சதமடித்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சதமடித்த முதல் வீரர் ஆனார்.
இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் நான்காவது அதிகபட்ச பார்ட்னர்ஷிப்
ஹெட் மற்றும் ஸ்மித் பார்ட்னர்ஷிப்பில் முதல் இன்னிங்ஸில் 285 ரன்கள் எடுத்த நிலையில், இது தற்போது இந்தியாவுக்கு எதிராக எந்தவொரு விக்கெட்டுக்கும் ஆஸ்திரேலியாவின் நான்காவது அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாகும். ரிக்கி பாண்டிங் மற்றும் மைக்கேல் கிளார்க் 2012இல் எடுத்த 386 ரன்கள் பார்ட்னர்ஷிப் முதலிடத்திலும், கிளார்க் மற்றும் மைக்கேல் ஹஸ்ஸி 2012இல் எடுத்த 334* ரன்கள் பார்ட்னர்ஷிப் இரண்டாம் இடத்திலும், பாண்டிங் மற்றும் கிளார்க் 2012இல் எடுத்த 288 ரன்கள் பார்ட்னர்ஷிப் மூன்றாம் இடத்திலும் உள்ளன. இங்கிலாந்தில் ஆஸ்திரேலியாவுக்காக நான்காவது விக்கெட்டுக்கு எடுத்த இரண்டாவது அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பும் இதுவாகும். இதற்கு முன்பு சர் டொனால்ட் பிராட்மேன் மற்றும் பில் போன்ஸ்ஃபோர்ட் 1934இல் ஹெடிங்லேயில் இங்கிலாந்துக்கு எதிராக நான்காவது விக்கெட்டுக்கு 388 ரன்கள் சேர்த்ததாக அதிகபட்சமாகும்.