
WTC Final 2023 : இந்திய கிரிக்கெட் அணிக்கு போட்டிக் கட்டணத்தில் 100% அபராதம்
செய்தி முன்னோட்டம்
லண்டன் ஓவலில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணி மெதுவாக பந்துவீசியதற்காக முழு போட்டிக் கட்டணமும் அபராதமாக விதிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 11) போட்டியின் ஐந்தாம் நாளில் இந்தியா 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை இழந்தது.
இந்நிலையில், திங்களன்று (ஜூன் 12) ஐசிசி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் அபராதம் விதித்துள்ளது. இரு அணிகளுமே கடைசி நாளில் மெதுவாக பந்துவீசியதாக குற்றம் சாட்டியுள்ள ஐசிசி, இந்தியாவுக்கு முழு போட்டிக் கட்டணத்தையும், ஆஸ்திரேலியாவுக்கு 80 சதவீத போட்டிக் கட்டணத்தையும் அபராதமாக விதித்து உத்தரவிட்டுள்ளது.
shubman gill fined for tweet
ஷுப்மன் கில் மீது நடவடிக்கை
மூன்றாவது நடுவரால் உறுதிசெய்யப்பட்ட சர்ச்சைக்குரிய கேமரூன் கிரீன் கேட்ச் தொடர்பாக ஷுப்மன் கில் தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டலாக ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.
இந்த கேட்ச் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வல்லுநர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தாலும், ஷுப்மன் கில் சமூக ஊடகத்தில் பதிவிட்டதை ரிக்கி பாண்டிங் விமர்சித்துள்ளார்.
ஷுப்மன் கில் ஐசிசியின் தடையை எதிர்கொள்ள நேரிடும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.
இந்நிலையில் ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஷுப்மன் கில்லின் போட்டிக் கட்டணத்தில் 15 சதவீதம் அபராதம் விதித்துள்ளது. அவர் இதுபோன்ற செயலை தொடர்ந்தாள் தடையை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரித்துள்ளது.