மகளிர் ஐபிஎல் 2023 : நாட் ஸ்கிவர்-ஹேலி மேத்யூஸ் ஜோடி அபாரம்! மும்பை இந்தியன்ஸ் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
மும்பையின் பிரபோர்ன் மைதானத்தில் 2023 மகளிர் ஐபிஎல் தொடரின் நான்காவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியை வீழ்த்தியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 18.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 155 ரன்கள் எடுத்தது. மும்பை அணியின் ஹேலி மேத்யூஸ் அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 156 ரன்கள் இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய மும்பை, 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஹேலி மேத்யூஸ் 77* ரன்களும், நாட் ஸ்கிவர்-பிரண்ட் 55* ரன்களுடம் எடுத்தனர்.
மகளிர் ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் ஆதிக்கம்
முன்னதாக, தனது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தியதன் மூலம் தற்போது இரண்டு வெற்றிகளுடன், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸின் சாய்கா இஷாக், ஆர்சிபி அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி நான்கு ஓவர்களில் 26 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் குஜராத் அணிக்கு எதிராக 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த நிலையில், தற்போது இரண்டு ஆட்டங்களில் ஆறு விக்கெட்டுகளுடன், மகளிர் ஐபிஎல்லின் பர்பிள் கேப் வைத்திருப்பவராக உள்ளார். இதற்கிடையே ஸ்மிரிதி மந்தனா தலைமையிலான ஆர்சிபி தனது இரண்டு போட்டிகளிலும் தோல்வியுற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்துக்கு முந்தைய இடத்தில் பின்தங்கியுள்ளது.