உலக தடகள சாம்பியன்ஷிப்: பதக்க வாய்ப்பை இழந்தாலும் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற பருல் சவுத்ரி
ஹங்கேரியின் புடாபெஸ்டில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 27) நடந்த தடகள உலக சாம்பியன்ஷிப் 3000 மீ ஸ்டீபிள்சேஸின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பருல் சவுத்ரி 11வது இடம் பிடித்து தோல்வி அடைந்தார். முன்னதாக, மகளிருக்கான 3000 மீ ஸ்டீபிள்சேஸில் 2023 உலக தடகள சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை எட்டிய முதல் இந்தியர் என்ற சாதனையை பருல் சவுத்ரி ஏற்கனவே படைத்திருந்தார். மேலும், உலக தடகள சாம்பியன்ஷிப்பில் டிராக் நிகழ்வின் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்ற இரண்டாவது இந்திய பெண் வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார். இந்நிலையில், இறுதிப்போட்டியில் உலகின் தலைசிறந்த வீராங்கனைகளுடன் போட்டியிட்ட பருல் சவுத்ரி 9:15:31 நிமிடத்தில் இலக்கை எட்டி போட்டியில் 11வது இடத்தை பிடித்தார்.
2024 பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி
போட்டியில் 11வது இடம் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தாலும், 9:15:31 நிமிடங்களில் இலக்கை எட்டி புதிய தேசிய சாதனை படைத்தார். மேலும் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கு பெறுவதற்கான தகுதி நேரமான 9.23 நிமிடங்களை விட குறைவான நேரத்தில் இலக்கை எட்டி, ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளார். உத்தரபிரதேசத்தில் மீரட் அருகே உள்ள இக்லௌடா கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவசாயியின் மகள் என்ற எளிய பின்னணியைக் கொண்ட பருல் சவுத்ரி, தனது விடா முயற்சி மூலம் 3000 மீ ஸ்டீபிள்சேஸ் போட்டியில் தொடர்ந்து முன்னேறி வந்துள்ளார். தற்போது உலக தடகள சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது மற்றும் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றதன் மூலம் ஸ்டீபிள்சேஸ் துறையில் இந்திய விளையாட்டு வீரர்களுக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளித்துள்ளார்.