நீரஜ் சோப்ரா மட்டுமல்ல! முதல்முறையாக ஈட்டி எறிதலில் 3 இந்திய வீரர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி
வெள்ளியன்று (ஆகஸ்ட் 25) நடந்த தடகள உலக சாம்பியன்ஷிப் 2023 இன் ஈட்டி எறிதல் போட்டியின் தகுதிச் சுற்றில் இந்திய வீரர்கள் மூன்று பேர் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். முன்னதாக, குழு ஏ'வில் இடம் பெற்றுள்ள நீரஜ் சோப்ரா தனது முதல் முயற்சியிலேயே 88.77 மீட்டர் தூரத்திற்கு எறிந்து இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றார். மேலும், 2024 ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி இலக்கு தூரத்தையும் தாண்டியதால், ஒலிம்பிக்கில் போட்டியிடவும் தகுதி பெற்றுள்ளார். இதற்கிடையே, மேலும் இரண்டு வீரர்களும் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இதன் மூலம் முதன்முறையாக 3 ஈட்டி எறிதல் வீரர்கள் உலக தடகள சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற வீரர்கள்
இந்திய வீரர் டிபி மினு நீரஜ் சோப்ராவுடன் குழு ஏவில் போட்டியிட்டு அதிகபட்சமாக 81.31மீ எறிந்து குழுவில் மூன்றாவது இடத்தையும் ஒட்டுமொத்தமாக ஆறாவது இடத்தையும் பெற்றார். இதேபோல் கிஷோர் ஜெனா குழு பி பிரிவில் 80.55 மீ எறிந்து ஒட்டுமொத்தமாக ஒன்பதாவது இடத்தைப் பிடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். இந்த போட்டியின் விதிப்படி 83மீ தூரத்திற்கு ஈட்டி எறியும் வீரர்கள் நேரடியாக தகுதி பெறுவார்கள் அல்லது முதல் 12 இடங்களை பிடிப்பவர்கள் தகுதி பெறுவார்கள். 83மீ விதியின் கீழ் நீரஜ் சோப்ரா, பாகிஸ்தானின் அர்ஷத் நதீம், செக் குடியரசின் ஜக்குப் வட்லெஜ் ஆகிய மூன்று வீரர்கள் மட்டுமே நேரடியாக தகுதி பெற்ற நிலையில், எறிதல் தூரத்தின் அடிப்படையில் இதர வீரர்கள் தகுதி பெற்றனர்.