உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் இந்திய அணிக்கு முதல் தங்கம்
வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 4) ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் நடந்த உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் 2023 இல் இந்திய மகளிர் அணி தங்கம் வென்றுள்ளது. ஜோதி சுரேகா வென்னம், பர்னீத் கவுர் மற்றும் அதிதி கோபிசந்த் ஸ்வாமி ஆகியோர் அடங்கிய இந்திய மகளிர் அணி காம்பவுண்ட் பிரிவின் இறுதிப்போட்டியில், மெக்சிகோவின் டாஃப்னே குயின்டெரோ, அனா சோஃபா ஹெர்னாண்டஸ் ஜியோன், ஆண்ட்ரியா பெசெரா ஆகியோரை 235-229 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்தனர். வில்வித்தை உலக சாம்பியன்ஷிப்பில் இதுவரை எந்தப் பிரிவிலும் இந்தியா தங்கம் வெல்லாத நிலையில், தற்போது இந்திய மகளிர் அணி முதல் தங்கத்தை வென்று வரலாறு படைத்துள்ளது. இந்த போட்டி 2024 பாரிஸ் ஒலிம்பிக் வில்வித்தை போட்டிக்கான தகுதிச் சுற்று போட்டியாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.