மகளிர் டி20 உலகக்கோப்பை : இந்தியா அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யுமா?
ஐசிசி மகளிர் டி 20 உலகக் கோப்பையில் அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க, இன்றைய (பிப்ரவரி 20) போட்டியில் அயர்லாந்திடம் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. முன்னதாக, இங்கிலாந்தை வீழ்த்தியிருந்தால் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு ஏற்கனவே உறுதியாகியிருக்கும். அது இல்லாத நிலையில், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டி முக்கியத்துவம் பெற்றது. அந்த போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 19) பாகிஸ்தானை வெஸ்ட் இண்டீஸ் கடுமையாக போராடி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் தற்போது இந்தியாவும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளும் சம புள்ளியில் இருந்தாலும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கூடுதல் போட்டிகள் எதுவும் இல்லை. மேலும் நிகர ரன் ரேட் அடிப்படையில் இந்தியாவை விட மிகவும் பின்தங்கியுள்ளது.
பாகிஸ்தான் - இங்கிலாந்து போட்டியால் இந்தியாவுக்கு சிக்கல்
இன்று நடக்கும் போட்டியில் இந்தியா அயர்லாந்தை வீழ்த்தி விட்டால், லீக் சுற்றின் முடிவில் தானாக முதல் இரண்டு இடங்களில் இடம் பெற்றுவிடும். இந்தியா அயர்லாந்தை வீழ்த்தவே வாய்ப்பு அதிகம் என்றாலும், எதிர்பாராத மேஜிக் நடந்து இந்தியா தோல்வியடைந்தால், பாகிஸ்தானும் இங்கிலாந்தும் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 21) மோதும் போட்டியின் முடிவை எதிர்நோக்க வேண்டியிருக்கும். இந்தியா தோல்வியடைந்து, அந்த போட்டியில் பாகிஸ்தான் இங்கிலாந்தை வீழ்த்தினால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் சம புள்ளிகளுடன் இருக்கும். அப்போது நிகர ரன் ரேட் அடிப்படையில் பாகிஸ்தான் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிடும். இதனால் இன்றைய போட்டியில் இந்தியா அயர்லாந்தை வீழ்த்தியே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.