மகளிர் ஐபிஎல் 2025: இரண்டாவது முறையாக பட்டம் வென்றது மும்பை இந்தியன்ஸ்; டெல்லி கேப்பிடல்ஸுக்கு இப்படியொரு சோகமா?
செய்தி முன்னோட்டம்
மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற மகளிர் ஐபிஎல் 2025 தொடரின் இறுதிப் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி பட்டத்தைக் கைப்பற்றியது.
மகளிர் ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இது இரண்டாவது பட்டமாகும். முன்னதாக, டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதையடுத்து பேட்டிங் தொடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வெளியேற ஆரம்பத்திலேயே பின்னைடைவை எதிர்கொண்டது.
எனினும், அதன் பின்னர் ஜோடி சேர்ந்த நாட் ஸ்கிவர் பிரண்ட் மற்றும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் நிலைத்து நின்று அணியை மீட்டனர். இதில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் அரைசதம் கடந்து 66 ரன்கள் சேர்த்தார்.
150 ரன்கள் இலக்கு
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு 150 ரன்கள் இலக்கு
மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து 150 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது.
கடைசி வரை போராடிய டெல்லி கேப்பிடல்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 8 விக்கெட் வித்தியாசத்தில் பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்தது.
2023 இல் மகளிர் ஐபிஎல் தொடங்கியதில் இருந்து, தொடர்ந்து மூன்றாவது முறையாக அனைத்து சீசனிலும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற சிறப்பை டெல்லி கேப்பிடல்ஸ் கொண்டிருந்தாலும், ஒருமுறை கூட பட்டம் வெல்ல முடியாமல் சோகத்துடன் முடித்துள்ளது.