விம்பிள்டன் 2026: நடுவர் தீர்ப்பை எதிர்க்க புதிய வீடியோ ரிவியூ வசதி! வீரர்களுக்கு அன்லிமிடெட் வாய்ப்பு
செய்தி முன்னோட்டம்
டென்னிஸ் விளையாட்டின் பாரம்பரியம் மாறாத தொடரான விம்பிள்டன், வரும் 2026 ஆம் ஆண்டு முதல் ஒரு மிகப்பெரிய தொழில்நுட்ப மாற்றத்திற்குத் தயாராகிவிட்டது. களத்தில் நடுவர்கள் எடுக்கும் சில கடினமான முடிவுகளை மறுஆய்வு செய்யும் வீடியோ ரிவியூ (Video Review) வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக ஆல் இங்கிலாந்து கிளப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கூடுதல் விவரங்கள் இங்கே:-
ரிவியூ
எதையெல்லாம் ரிவியூ செய்யலாம்?
இதுவரை பந்து கோட்டிற்கு உள்ளே விழுந்ததா என்பதை மட்டுமே தொழில்நுட்பம் மூலம் பார்க்க முடிந்தது. ஆனால், இனிமேல் பந்து இரண்டு முறை தரையில் பட்டதா என்பதைச் சரிபார்க்கலாம். பந்து வீரரின் உடல் அல்லது ராக்கெட்டில் பட்டதா என்பதை உறுதி செய்யலாம். ஆட்டத்தின் போது எதிரணி வீரருக்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டதா என்பதைப் பார்க்கலாம். விதிகளை மீறி அடிக்கப்பட்ட ஷாட்களை மறுஆய்வு செய்யலாம்.
சிறப்பம்சங்கள்
முக்கிய சிறப்பம்சங்கள்
முதற்கட்டமாக சென்டர் கோர்ட், நம்பர் 1 கோர்ட் உள்ளிட்ட முக்கியமான 6 மைதானங்களில் இந்த வசதி இருக்கும். மற்ற கிராண்ட் ஸ்லாம் தொடர்களைப் போலன்றி, விம்பிள்டனில் வீரர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் ரிவியூ கேட்கலாம். இதில் எவ்வித கட்டுப்பாடும் இல்லை. ஒரு பாயிண்ட் முடிந்த உடனேயோ அல்லது நடுவரின் தீர்ப்பால் ஆட்டம் தடைபட்ட உடனேயோ வீரர்கள் ரிவியூ கோரலாம். 2025 ஆம் ஆண்டு விம்பிள்டன் தொடரில் அனஸ்தேசியா பாவ்லியுசென்கோவா மற்றும் சோனே கார்டல் இடையிலான போட்டியின் போது, மின்னணு முறையில் பந்தைக் கண்காணிப்பதில் சில தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டன. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தீர்ப்புகளில் 100% துல்லியத்தைக் கொண்டுவர இந்த வீடியோ ரிவியூ முறையை விம்பிள்டன் நிர்வாகம் கொண்டு வருகிறது.
ரசிகர்கள்
ரசிகர்களுக்கும் குட் நியூஸ்
மைதானத்தில் இருக்கும் ரசிகர்களுக்கும், டிவியில் பார்ப்பவர்களுக்கும் தெளிவாகப் புரியும் வகையில் ஸ்கோர்போர்டுகளில் "Out" மற்றும் "Fault" போன்ற அறிவிப்புகள் இன்னும் பெரிய திரையில், தெளிவான காட்சிகளுடன் காட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.