விம்பிள்டன் போட்டியின்போது மாதவிடாயா? இனி கவலையில்லை! வீராங்கனைகளுக்கு சூப்பர் அறிவிப்பு
லண்டனில் விம்பிள்டன் 2023 தொடர் திங்கட்கிழமை (ஜூலை 3) தொடங்க உள்ள நிலையில், பெண் டென்னிஸ் வீராங்கனைகள் தங்கள் மாதவிடாய் காலத்தில் எதிர்கொள்ளும் அசவுகர்யத்தை எதிர்கொள்வதற்கு புதிய தீர்வை கொண்டு வந்துள்ளது. விம்பிள்டனின் போட்டியின்போது வீரர்கள் கண்டிப்பாக வெள்ளை உடைகளை அணிவது போட்டியின் பிரபலமான அம்சங்களில் ஒன்றாகும். ஆனால் தற்போது போட்டியை நடத்தும் ஆல் இங்கிலாந்து கிளப் உலக டென்னிஸ் அசோசியேஷன், ஆடை உற்பத்தியாளர்களுக்கு இடையே நடத்திய விவாதங்களுக்கு பிறகு சாம்பியன்ஷிப்பில் போட்டியிடும் பெண்களை எவ்வாறு சிறந்த முறையில் ஆதரிப்பது என்பது குறித்த புதிய விதிகளை அமலுக்கு கொண்டுவந்துள்ளது.
ஆல் இங்கிலாந்து கிளப்பின் புதிய விதிகளில் கூறப்பட்டவை
புதிய விதிகளின்படி, விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்கும் பெண்கள் இப்போது 'திடமான, அடர்-நிறம் கொண்ட கீழாடைகளை அணியலாம். எனினும் ஷார்ட்ஸ் அல்லது பாவாடையை விட நீளமாக இல்லாதவாறு உடைகளை அமைத்துக்கொள்ள வேண்டும். ஆடை மற்றும் அணிகலன்களுக்கான மற்ற அனைத்து விதிகளும் ஏற்கனவே உள்ளதைப்போலவே உள்ளன. ஆல் இங்கிலாந்து கிளப்பின் தலைமை நிர்வாகி சாலி போல்டன், "வீரர்களை ஆதரிப்பதற்கும், அவர்கள் எவ்வாறு சிறந்த முறையில் செயல்பட முடியும் என்பது குறித்த அவர்களின் கருத்துக்களைக் கேட்பதற்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்" என்று கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார். இந்த மாற்றத்திற்கு டென்னிஸ் வீராங்கனைகள் உள்ளிட்ட பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.