முதல் டி20-ல் வைபவ் சூர்யவன்ஷி ஆடுவாரா? மோர்னே மோர்கல் விளக்கம்
செய்தி முன்னோட்டம்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம் லக்னோவில் இன்று இரவு நடைபெறவுள்ள நிலையில், 15 வயதான இளம் நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணியின் ஆடும் லெவனில் (Playing XI) இடம்பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. முன்னதாக ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய அணியில் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டியில் அபிஷேக் சர்மாவுடன் தொடக்க ஆட்டக்காரராகக் களம் கண்டு அசத்திய வைபவ், இந்திய ஆடுகளங்களின் தன்மை மற்றும் சீனியர் வீரர்களின் வருகை காரணமாக இன்றைய போட்டியில் களமிறங்குவாரா என்பது குறித்து இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் தெரிவித்துள்ளார்.
ப்ளேயிங் லெவன்
மோர்னே மோர்கல் சூசகம்
போட்டிக்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பில் வைபவ் சூர்யவன்ஷியின் இடம் குறித்து கேட்கப்பட்டதற்குப் பதிலளித்த மோர்கல், "வீரர்கள் சுழற்சி முறையில் வாய்ப்பு பெறுவதை தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தொடர்ந்து உறுதி செய்து வருகிறார்.
அதேநேரத்தில், அடுத்த டி20 உலகக்கோப்பையை வெல்வதற்கு எந்த அணிச் சேர்க்கை மிகச் சரியாக இருக்கும் என்பதைத் தேர்வுக்குழுவினரும், தலைமைப் பயிற்சியாளரும், கேப்டனுமே முடிவு செய்வார்கள்.
வீரர்கள் அனைவரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை முடித்துக் கொண்டு நீண்ட பயணக் களைப்புடன் (Jet lag) இப்போதுதான் திரும்பியுள்ளனர். அவர்களின் உடல்நிலையைக் கண்காணித்த பிறகே இறுதி ஆடும் லெவன் குறித்து முடிவெடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
சிறந்த வீரர்
வைபவ் சூர்யவன்ஷி
மேலும் இளம் வீரர் வைபவ் குறித்துப் பெருமிதத்துடன் பேசிய மோர்கல், "வைபவ் சூர்யவன்ஷியின் அபாரத் திறமை நாம் அனைவரும் அறிந்ததுதான்.
அவருக்கு அனைத்துப் போட்டிகளிலும் ஆடும் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், சர்வதேச அனுபவம் வாய்ந்த முன்னணி வீரர்களுடன் ஓய்வறையைப் பகிர்வதும், ஹோட்டல் மற்றும் பயணங்களின்போது அவர்களுடன் உரையாடுவதும் அவரது கிரிக்கெட் எதிர்காலத்திற்குப் பெரும் பலமாக அமையும்.
சீனியர் வீரர்கள் நெட் பயிற்சியில் முதல் 15 பந்துகளை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள், இன்னிங்ஸை எப்படி கட்டமைக்கிறார்கள் என்பதை அவர் உன்னிப்பாகக் கவனித்துக் கற்றுக்கொள்கிறார்.
இந்தச் சூழலே அவரை மிகச் சிறந்த கிரிக்கெட் வீரராக வார்த்தெடுக்கும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.