WTC 2023 இறுதிப்போட்டியில் இந்தியாவின் தோல்விக்கு காரணம் என்ன? சாட்ஜிபிடியின் சுவாரஸ்ய பதில்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தோல்வியடைந்ததை அடுத்து, 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி வெற்றிக்குப் பிறகு, மீண்டும் ஒரு ஐசிசி டிராபியை வெல்லும் வாய்ப்பை இந்தியா இழந்தது. 2013இல் எம்எஸ் தோனி தலைமையிலான அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பிறகு, இந்திய அணி பலமுறை ஐசிசி போட்டிகளில் அரையிறுதி வரை சென்று தோல்வி அடைந்துள்ளது. மேலும், 2021இல் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முதல் சீசனின் இறுதிப்போட்டியில் விளையாடிய இந்தியா நியூஸிலாந்திடம் தோல்வியைத் தழுவியது. இந்த முறை நிச்சயம் கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் தோற்றுள்ளது ரசிகர்களிடையே சோர்வை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் தோல்வி குறித்து சாட்ஜிபிடியிடம் கேள்வி
ஐசிசி நிகழ்வுகளில் இந்தியா கோப்பையை வெல்ல முடியவில்லை என சாட்ஜிபிடியிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, அது பல சுவாரஸ்யமான விஷயங்களை பட்டியலிட்டுள்ளது. ஐசிசி போட்டிகளில் இந்திய அணி வெற்றிகள் மற்றும் தோல்விகள் என இரண்டையும் பெற்றுள்ளது உண்மைதான் என்றாலும், கிரிக்கெட் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த விளையாட்டு என குறிப்பிட்டுள்ள சாட்ஜிபிடி, கிரிக்கெட் மீதான இந்தியர்களின் அபரிமிதமான ஆர்வம் காரணமாக இந்திய கிரிக்கெட் அணி பெரும்பாலும் ரசிகர்கள் மற்றும் ஊடகங்களின் அதிக எதிர்பார்ப்புகளால் அதிக அழுத்தத்தை எதிர்கொள்கிறது என்றும், இது வீரர்களின் மனநிலையை பாதிப்பதாகவும் தெரிவித்துள்ளது. இது தவிர அணி தேர்வு, வீரர்களின் காயங்கள், ஸ்ட்ராட்டஜிக் முடிவுகளை எடுப்பதில் தோல்வி போன்ற பல்வேறு காரணங்களையும் சாட்ஜிபிடி குறிப்பிட்டுள்ளது.