தமிழகத்தில் இருந்து மகளிர் ஐபிஎல்லுக்கு தேர்வான முதல் பெண்; யார் இந்த கீர்த்தனா?
தமிழகத்தில் இருந்து மகளிர் ஐபிஎல்லுக்கு விளையாட தேர்வு செய்யப்பட்ட முதல் வீராங்கனை என்ற பெருமையை கீர்த்தனா பாலகிருஷ்ணன் பெற்றுள்ளார். கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 9) அன்று, நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் கீர்த்தனா பாலகிருஷ்ணனை அவரது அடிப்படை விலையான ரூ.10 லட்சத்திற்கு ஏலத்தில் வாங்கியுள்ளது. இதன்மூலம், அமந்தீப் கவுர், எஸ் சஜனா, பாத்திமா ஜாஃபர் மற்றும் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷப்னிம் இஸ்மாயில் ஆகியோருடன் கீர்த்தனா பாலகிருஷ்ணனை மும்பை இந்தியன்ஸ் ஐந்தாவது ஆல்ரவுண்டராக அணியில் இணைத்ததுள்ளது. கீர்த்தனா மகளிர் ஐபிஎல்லுக்கு தேர்வான நிலையில், முதல் ஆளாக எக்ஸ் தளத்தில் வாழ்த்திய தினேஷ் கார்த்திக் அவரது பின்னணி குறித்த நெகிழ்ச்சியான தகவலையும் வெளியிட்டுள்ளார்.
அபினவ் முகுந்தின் தந்தையிடம் பயிற்சி பெற்ற கீர்த்தனா
கீர்த்தனா பாலகிருஷ்ணன் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடிய மூத்த பேட்டர் அபினவ் முகுந்தின் தந்தை டி.எஸ்.முகுந்தின் கீழ் அவரது அகாடமியில் பயிற்சி பெற்றார். அடிப்படையில் ஒரு லெக் ஸ்பின்னரான கீர்த்தனா, லோயர் மிடில் ஆர்டரில் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு ஒரு ஆல்ரவுண்டராக பரிணமித்து வருகிறார். டி.எஸ்.முகுந்த் எளிய பின்னணியில் இருந்து வரும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு கட்டணம் எதுவும் பெறாமல் பயிற்சியளித்து வருவதோடு, தனது மாணவர்களுக்கு சொந்த செலவில் கிரிக்கெட் உபகரணங்களையும் வழங்கி வருகிறார். கீர்த்தனா பாலகிருஷ்ணனின் தந்தை ஒரு டாக்சி ஓட்டுநர் என தினேஷ் கார்த்திக் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.