உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: கான்பூர் போட்டி டிராவில் முடிந்தால் தரவரிசையில் இந்தியாவின் நிலை என்னாகும்?
கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 28) தொடங்கியது. முதல் நாளில் மழை காரணமாக தாமதமாக தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. வங்கதேச அணி 35 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது. இரண்டாவது நாளான இன்று, ஒரு பந்துகூட வீசப்படாமல் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. இன்னும் மூன்று நாட்கள் எஞ்சியுள்ள நிலையில், போட்டி டிராவில் முடியவே அதிக வாய்ப்புள்ளது. இந்நிலையில், இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியல்
இந்த போட்டிக்கு முன்பு வரை இந்திய கிரிக்கெட் அணி 10 போட்டிகளில் 7 வெற்றி, 2 தோல்விகளை பெற்றுள்ளதோடு, ஒரு போட்டியை டிரா செய்துள்ளது. இதன் மூலம் 71.67 என்ற ரேட்டிங் சதவீதத்துடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. கான்பூரில் வெற்றி பெற்றால் இந்தியாவின் ரேட்டிங் சதவீதம் 74.24 ஆக உயர்ந்திருக்கும். இருப்பினும், இது டிராவாக இருந்தால், இந்தியாவின் ரேட்டிங் சதவீதம் 68.18 ஆகக் குறையும். மேலும் இரண்டு முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள இந்திய அணி, மூன்றாவது முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதில் சிக்கல் ஏற்படலாம்.
எட்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ள இந்தியா
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 சுழற்சியில் இந்தியாவுக்கு இன்னும் எட்டு போட்டிகள் மீதமுள்ளன. இவற்றில் நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ளன. இவை அக்டோபர் 16 அன்று தொடங்கி நவம்பர் 5 அன்று முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் அந்நாட்டு அணிக்கு எதிராக பார்டர் கவாஸ்கர் டிராபியின் இந்தியா விளையாட உள்ளது. பார்டர் கவாஸ்கர் டிராபி இந்த முறை ஐந்து போட்டிகளைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை நவம்பர் 22 தொடங்கி ஜனவரி 7, 2025இல் முடிவடைய உள்ளது. இவற்றில் ஐந்து போட்டிகளில் வென்றால் நிச்சயம் இறுதிப்போட்டிக்கு முன்னேறலாம். அதைவிட குறைவானால் இதர அணிகளின் வெற்றி தோல்வி முக்கிய பங்கு வகிக்கும்.