விராட் கோலி, பாபர் அசாமை பின்னுக்குத் தள்ளி வெஸ்ட் இண்டீஸ் வீரர் சாய் ஹோப் சாதனை
சனிக்கிழமை (நவம்பர் 2) ஆன்டிகுவாவில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷாய் ஹோப் தனது 17வது சதத்தை பூர்த்தி செய்தார். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் முன்கூட்டியே ஆட்டமிழந்த பிறகு, ஹோப் கீசி கார்டியுடன் இணைந்து 143 ரன்கள் எடுத்தனர். 118 பந்துகளில் சதத்தை எட்டிய சாய் ஹோப், 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் 328 ரன்கள் எடுத்தது. கீசி கார்டி 71 ரன்கள் எடுத்தார். எனினும், அபாரமாக பேட்டிங் செய்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக மூன்றாவது அதிக சதம்
இந்த சதம் மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக சதமடித்தவர்கள் பட்டியலில் சாய் ஹோப் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். முதல் இடத்தில் கிறிஸ் கெயில் 25 சதங்களுடனும், இரண்டாம் இடத்தில் பிரையன் லாரா 19 சதங்களுடனும் உள்ளனர். இதற்கிடையே, மற்றொரு தனித்துவமான சாதனையில், சாய் ஹோப் இப்போது 2020 முதல் ஒருநாள் கிரிக்கெட் சதங்களின் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த காலகட்டத்தில் ஒன்பது சதங்களுடன் பாபர் அசாமை சாய் ஹோப் விஞ்சியுள்ளார். பாபர் அசாம் 8 சதங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ள நிலையில், குயின்டன் டி காக், ஃபகார் ஜமான், விராட் கோலி, ரஹ்மானுல்லா குர்பாஸ் ஆகியோர் 7 சதங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.