INDvsNZ 2வது டெஸ்ட்: நியூசிலாந்துக்கு எதிராக 11 விக்கெட்டுகள்; சாதனையாளர்கள் பட்டியலில் இணைந்த வாஷிங்டன் சுந்தர்
வாஷிங்டன் சுந்தர் நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தவறவிட்ட ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் இரண்டாவது டெஸ்டில் முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வலுவான தாக்கத்தை ஏற்படுத்தினார். அவரது முயற்சியால் நியூசிலாந்து மூன்றாவது இன்னிங்ஸில் 255 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம் இந்தியாவுக்கு 359 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் இன்னிங்ஸில், 197/3 என வலுவாக இருந்த நியூசிலாந்தை 259/10க்கு வீழ்த்தியதில் வாஷிங்டன் சுந்தரின் பங்கு அளப்பரியது. மேலும், இரண்டாவது இன்னிங்ஸிலும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் வாஷிங்டன் சுந்தரின் செயல்பாடு
வாஷிங்டன் சுந்தர் இந்திய கிரிக்கெட் அணிக்காக இதுவரை ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 24.35 சராசரியில் 17 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். தற்போது புனேயில் நடந்து வரும் போட்டியில் எடுத்த 11 விக்கெட்டுகளும் இதில் அடங்கும். அவர் இதற்கு முன்னதாக, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் விளையாடியுள்ளார். அதில், இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து இன்னிங்ஸ்களில் இரண்டு விக்கெட்டுகளையும், ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர்-கவாஸ்கர் டிராபியில் நான்கு விக்கெட்டுகளையும் எடுத்தார். ஒட்டுமொத்தமாக, முதல்தர கிரிக்கெட்டில் 76 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஒரு போட்டியில் 10 விக்கெட் எடுப்பது இது இரண்டாவது முறையாகும்.
சாதனையாளர்கள் வரிசையில் இணைந்த வாஷிங்டன் சுந்தர்
ரவிச்சந்திரன் அஸ்வின், எரபள்ளி பிரசன்னா, அனில் கும்ப்ளே மற்றும் ஸ்ரீனிவாஸ் வெங்கடராகவன் ஆகியோருக்குப் பிறகு நியூசிலாந்துக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய ஐந்தாவது இந்தியர் என்ற பெருமையை வாஷிங்டன் சுந்தர் பெற்றுள்ளார். இதில் ரவிச்சந்திரன் அஸ்வின் மட்டும் நியூசிலாந்துக்கு எதிராக மூன்று முறை 10 விக்கெட் மைல்கல்லை எட்டியது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக, வாஷிங்டன் சுந்தரின் 11/115 போட்டிகளின் எண்ணிக்கையானது, நியூஸிலாந்திற்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில், இந்திய வீரர் ஒருவரின் நான்காவது சிறந்த பந்துவீச்சாகும். அஸ்வின் (2016ல் 13/140, 2012ல் 12/85), வெங்கடராகவன் (1965ல் 12/152) ஆகியோருக்கு அடுத்து வாஷிங்டன் உள்ளார்.