CT 2025: ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக கேட்ச் பிடித்து புதிய சாதனை படைத்தார் விராட் கோலி
செய்தி முன்னோட்டம்
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் விராட் கோலி ஃபீல்டிங்கில் புதிய சாதனை படைத்தார்.
விராட் கோலி இந்த போட்டியில் நஸீம் ஷா அடித்த பந்தை கேட்ச் பிடித்து அவுட்டாக்கியதன் மூலம் இந்த சாதனையை படைத்தார். இந்த பந்தை குல்தீப் யாதவ் வீசினார்.
இந்த கேட்ச் மூலம், அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அவுட்ஃபீல்டில் 157 கேட்ச்களுடன் அதிக கேட்சை பிடித்த இந்திய வீரர் என்ற முகமது அசாருதீனின் சாதனையை முறியடித்தார்.
முன்னதாக, சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வங்கதேசத்திற்கு எதிரான முந்தைய போட்டியில் வங்கதேச கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ மற்றும் ஜேக்கர் அலியை கேட்ச் மூலம் அவுட்டாக்கி அசாருதீனின் சாதனையை சமன் செய்திருந்தார்.
மூன்றாவது இடம்
சர்வதேச அளவில் மூன்றாவது இடம்
அவுட்ஃபீல்டில் அதிக கேட்ச் பிடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் தற்போது முதல் இரண்டு இடங்களில் முறையே விராட் கோலி மற்றும் அசாருதீன் உள்ள நிலையில், மூன்றாவது இடத்தில் சச்சின் டெண்டுல்கர் (140 கேட்சுகள்) உள்ளார்.
இந்த பட்டியலில் நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் முறையே ராகுல் டிராவிட் (124 கேட்ச்கள்), சுரேஷ் ரெய்னா (102 கேட்ச்கள்) ஆகியோர் உள்ளனர்.
இதற்கிடையே, சர்வதேச அளவில் தற்போது விராட் கோலியை விட இரண்டு பேர் மட்டுமே ஒருநாள் கிரிக்கெட் அவுட்ஃபீல்டில் அதிக கேட்ச் பிடித்தவர்களாக உள்ளனர்.
சர்வதேச அளவில் முதலிடத்தில் இலங்கையின் மஹேல ஜெயவர்தனே 218 கேட்ச்களுடன் உள்ளார். இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் 160 விக்கெட்டுகளுடன் உள்ளார்.