விருதுகளை நடைபாதையில் விட்டுச் சென்ற மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்
ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற வினேஷ் போகத், சனிக்கிழமையன்று (டிசம்பர் 30), அர்ஜுனா மற்றும் கேல் ரத்னா விருதுகளை புதுதில்லியில் உள்ள கர்தவ்யா பாதையில் உள்ள நடைபாதையில் விட்டுச் சென்றார். மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் நெருங்கிய உதவியாளரான சஞ்சய் சிங், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக தேர்வு செய்யப்பட்டது வீரர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பஜ்ரங் பூனியா, சாக்ஷி மாலிக் உள்ளிட்ட பலரும் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய நிலையில், வினேஷ் போகத் பிரதமர் நரேந்திர மோடிக்கு திறந்த கடிதம் ஒன்றை எழுதினார்.
பிரதமர் வீட்டின் முன் விருதை வைக்க முயன்ற வினேஷ் போகத்
கடிதத்தைத் தொடர்ந்து, வினேஷ் போகத் தனது விருதுகளை டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு வெளியே வைக்க முயன்றார். இருப்பினும், கர்தவ்யா பாதையில் அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து வினேஷ் தனது விருதுகளை கர்தவ்யா பாதையின் நடைபாதையில் விட்டுவிட முடிவு செய்தார். வினேஷ், சாக்ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா உள்ளிட்ட இந்தியாவின் தலைசிறந்த மல்யுத்த வீரர்கள் பிரிஜ் பூஷண் ஷரண் சிங்கிற்கு எதிராக பல மாதங்களாக போராட்டங்களுக்கு தலைமை தாங்கி நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, சஞ்சய் சிங் தலைமையிலான இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் புதிய நிர்வாக குழுவை மத்திய அரசு சமீபத்தில் சஸ்பெண்ட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.