2026 டி20 உலகக்கோப்பை: இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் நியமனம்
செய்தி முன்னோட்டம்
2026-ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் இணைந்து நடைபெறவுள்ள ஐசிசி ஆண்கள் டி20 உலகக்கோப்பைத் தொடருக்காக, இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் இலங்கை கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உலகக் கோப்பைத் தொடருக்கான அணியின் தயாரிப்புகளை மேம்படுத்தும் நோக்கில் அவர் ஒரு ஆலோசகர் அடிப்படையில் இந்தப் பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளார்.
பயிற்சியாளர்
பயிற்சியாளராக முதன்மைப் பணி
விக்ரம் ரத்தோர் வரும் ஜனவரி 18, 2026 அன்று தனது புதிய பொறுப்பை ஏற்றுக் கொள்வார். அவர் மார்ச் 10 ஆம் தேதி வரை இலங்கை அணியுடன் தங்கியிருந்து வீரர்களுக்குப் பயிற்சி அளிப்பார். பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கவுள்ள டி20 உலகக்கோப்பையில் இலங்கை பேட்டர்களின் திறனை மேம்படுத்துவதும், இக்கட்டான சூழல்களைக் கையாள்வதற்கான யுக்திகளை வகுத்துக் கொடுப்பதுமே இவரது முதன்மைப் பணியாகும்.
இலங்கை
இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் முடிவு
56 வயதான விக்ரம் ரத்தோர், இந்திய தேசிய அணிக்காக 6 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டவர். செப்டம்பர் 2019 முதல் ஜூலை 2024 வரை இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக மிக நீண்ட காலம் பணியாற்றிய பெருமை இவருக்கு உண்டு. மேலும், பிசிசிஐயின் நிலை 3 பயிற்சியாளரான இவர், தற்போது ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவிலும் ஒரு அங்கமாக இருந்து வருகிறார்.