கால் ஷூவில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான வாசகங்கள்; கடைசி நேரத்தில் ஜகா வாங்கிய கவாஜா
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு முன்னதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் உஸ்மான் கவாஜா தனது காலணிகளில் சில வாசகங்களை அணிந்து பயிற்சியில் ஈடுபட்டது சமூக வலைதளங்களில் புயலை கிளப்பியது. கவாஜாவின் காலணிகள் "சுதந்திரம் ஒரு மனித உரிமை" மற்றும் "அனைத்து உயிர்களும் சமம்" என்ற வாசகங்களை கொண்டுள்ளது. முன்னதாக, பெர்த்தில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் உஸ்மான் கவாஜா தனது ஷூவில் இதே வாசகத்தை கொண்டு விளையாட திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இந்த விஷயத்தில் ஐசிசி விதிகளை மேற்கோள் காட்டியதால் கவாஜா இந்த முடிவை கைவிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பான ஐசிசி விதிகள் என்ன?
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) விதிகளின்படி, குறிப்பாக, தேசிய சின்னம், வணிக சின்னம், நிகழ்வு சின்னம் போன்றவை தவிர்த்து வேறு எந்த வாசகங்களும் லோகோவும் அனுமதிக்கப்படாது. கூடுதலாக, இந்த விதிமுறைகளுக்கு இணங்காத எந்தவொரு ஆடை அல்லது உபகரணங்களைப் பற்றி எந்தவொரு போட்டி அதிகாரியும் அறிந்தால், வீரர் அதை மறைக்கும் வரை அல்லது வெளியேற்றும் வரை அவர் மீது நடவடிக்கை எடுக்க உரிமை உண்டு. குறிப்பாக, வீரரை போட்டியிலிருந்து தடை கூட செய்யப்படலாம் என்பதால், கவாஜாவிடம் இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெளிவாக கூறியதை அடுத்து அவர் பின்வாங்கியுள்ளார்.