INDvsAUS : நான்காவது டெஸ்ட் : 14வது சதத்தை நிறைவு செய்தார் உஸ்மான் கவாஜா
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 14வது சதத்தை விளாசியுள்ளார். அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் சதத்தை எட்டினார். மேலும் இதன் மூலம் தற்போது நடைபெற்று வரும் பார்டர்-கவாஸ்கர் தொடரில் கவாஜா மூன்றாவது முறையாக 50+ ஸ்கோரை எடுத்துள்ளார். மேலும் தொடரின் அதிக ரன்களை குவித்த இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவை பின்னுக்குத் தள்ளியுள்ளார். இதற்கிடையே முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் எடுத்துள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் உஸ்மான் கவாஜாவின் செயல்திறன்
2019 ஆஷஸ் தொடரைத் தொடர்ந்து அணியிலிருந்து நீக்கப்பட்ட கவாஜா, கடந்த ஆண்டு ஜனவரியில் ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் அணிக்கு மீண்டும் திரும்பினார். தனது மறுபிரவேசத்தில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் சதமடித்தார். அப்போது தொடங்கி 11 டெஸ்டில் 67.50 சராசரியில் 1,080 ரன்களை எடுத்துள்ளார். இந்த எண்ணிக்கையில் நான்கு சதங்கள் மற்றும் ஐந்து அரைசதங்கள் அடங்கும். 160 என்பது அவரது அதிகபட்ச ஸ்கோராகும். மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் கவாஜா டெஸ்ட் கிரிக்கெட்டில் 4,000 ரன்களை கடந்தார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி ஆட்டத்தின் போது இந்த மைல்கல்லை எட்டிய 27வது ஆஸ்திரேலிய வீரர் ஆனார்.