கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை : ஒரே பந்துக்கு இரண்டாவது முறையாக ரிவியூ கேட்ட அஸ்வின் ரவிச்சந்திரன்
கிரிக்கெட் ஜாம்பாவான்களில் ஒருவரான அஸ்வின் ரவிச்சந்திரன், டிஎன்பிஎல் 2023 தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். புதன்கிழமை (ஜூன் 14) நடந்த போட்டியில் திருச்சி அணிக்கு எதிரான போட்டியில் திண்டுக்கல் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அஸ்வின் முதல் இன்னிங்ஸில் வீசிய பந்தில் திருச்சியின் ஆர் ராஜ்குமார் அவுட் என கள நடுவர் அறிவித்தார். ராஜ்குமார் இதற்கு டிஆர்எஸ் ரிவியூ சென்றபோது, மூன்றாவது நடுவர் அவுட்டை ரத்து செய்தார். ஆனால் இதை ஏற்காத அஸ்வின் மீண்டும் முறையீடு செய்தார். எனினும் அஸ்வினுக்கு சாதகமாக முடிவு வழங்கப்படவில்லை. ஒரே பந்துக்கு இரண்டு முறை ரிவியூ கேட்கப்பட்டது உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே இது தான் முதல்முறை என கூறப்படுகிறது.