ஆறு மாதங்களுக்கு முன்பே 2025 இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்த அதிசயம்
ஒரு வரலாற்று மைல்கல்லில், பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் 2025 ஆம் ஆண்டு இந்தியா vs இங்கிலாந்து இடையே நடக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நான்கு நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன. இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் ஆஷஸ் அல்லாத டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட்டுகள் இந்த அளவுக்கு முன்கூட்டியே முழுமையாக முன்பதிவு செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். "முன்னோடியில்லாத கோரிக்கையைத் தொடர்ந்து, 2025 இல் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான ஆடவர் டெஸ்ட் போட்டியின் முதல் நான்கு நாட்களுக்கான பொது நுழைவுச் சீட்டுகள் இப்போது விற்றுத் தீர்ந்துவிட்டன" என்று எட்ஜ்பாஸ்டன் ஸ்டேடியம் அறிவித்தது.
ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குப் பின்னர் நடக்கும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த தொடர் ஜூன் 20, 2025 அன்று ஹெடிங்லி, லீட்ஸில் தொடங்கும். பிர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் ஜூலை 2 முதல் திட்டமிடப்பட்டுள்ளது. ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 4 வரை லீட்ஸ், எட்ஜ்பாஸ்டன், லார்ட்ஸ், மான்செஸ்டர் மற்றும் ஓவல் மைதானங்களில் நடைபெற உள்ளது. அவர்களின் 2021 சுற்றுப்பயணத்தின் போது, இந்திய கிரிக்கெட் அணி 2-1 என முன்னிலை பெற்றது. இருப்பினும், மான்செஸ்டரில் திட்டமிடப்பட்ட ஐந்தாவது டெஸ்ட், கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. ஜூலை 2022 இல் எட்ஜ்பாஸ்டனில் மீண்டும் திட்டமிடப்பட்ட இந்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது.