LOADING...
தாமஸ் கோப்பை அரையிறுதியில் பிரான்சிடம் 3-0 என அதிர்ச்சித் தோல்வி; வெண்கலத்துடன் நாடு திரும்பும் இந்திய அணி
தாமஸ் கோப்பை 2026 தொடரில் இந்திய பேட்மிண்டன் அணி வெண்கலம் வென்றது

தாமஸ் கோப்பை அரையிறுதியில் பிரான்சிடம் 3-0 என அதிர்ச்சித் தோல்வி; வெண்கலத்துடன் நாடு திரும்பும் இந்திய அணி

எழுதியவர் Sekar Chinnappan
May 03, 2026
02:44 pm

செய்தி முன்னோட்டம்

டென்மார்க்கின் ஹார்சன்ஸ் நகரில் சனிக்கிழமை நடைபெற்ற தாமஸ் கோப்பை 2026 பேட்மிண்டன் தொடரின் அரையிறுதியில், இந்திய அணி பிரான்சிடம் 3-0 என்ற கணக்கில் அதிர்ச்சித் தோல்வியடைந்தது. 2022ல் வென்ற சாம்பியன் பட்டத்தை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்ற இந்திய அணியின் கனவு தகர்ந்த நிலையில், இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கமே ஆறுதலாகக் கிடைத்தது. கூடுதல் விபரங்கள் இங்கே:-

பலவீனம்

லக்ஷ்யா சென் காயம்: இந்தியாவுக்கு ஏற்பட்ட பலவீனம்

அரையிறுதிப் போட்டி தொடங்குவதற்கு முன்பே இந்தியாவிற்கு ஒரு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டது. காலிறுதியில் சீன தைபே அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது, இந்தியாவின் முன்னணி வீரர் லக்ஷ்யா சென்னின் முழங்கையில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் அரையிறுதியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. அணியின் நட்சத்திர வீரர் இல்லாதது இந்திய அணியின் பலத்தை வெகுவாகக் குறைத்ததுடன், பிரான்ஸ் அணியின் ஆதிக்கத்திற்குப் பாதையாகவும் அமைந்தது.

போராட்டம்

ஆயுஷ் ஷெட்டி மற்றும் ஸ்ரீகாந்தின் போராட்டங்கள்

முதல் ஒற்றையர் ஆட்டத்தில் களமிறங்கிய இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, உலகின் 4 ஆம் நிலை வீரரான கிறிஸ்டோ போபோவை எதிர்கொண்டார். போபோவின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிய ஆயுஷ் ஷெட்டி, 11-21, 9-21 என்ற கணக்கில் நேர் செட்களில் தோல்வியடைந்தார். இதனைத் தொடர்ந்து அனுபவ வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், அலெக்ஸ் லேனியருடன் மோதினார். இரண்டாவது செட்டில் ஸ்ரீகாந்த் கடுமையாகப் போராடிய போதிலும், இறுதியில் 16-21, 18-21 என்ற கணக்கில் அவரும் தோல்வியைத் தழுவினார்.

Advertisement

கடைசி முயற்சி

நிர்ணயிக்கப்பட்ட வெற்றி: பிரணாயின் கடைசி முயற்சி

இந்தியா 0-2 எனப் பின்தங்கியிருந்த நிலையில், மூன்றாவது ஆட்டத்தில் எச்.எஸ்.பிரணாய் களமிறங்கினார். வாழ்வா-சாவா என்ற இந்தப் போட்டியில் தோமா ஜூனியர் போபோவை அவர் எதிர்கொண்டார். முதல் செட்டில் பிரணாய் 19-18 என முன்னிலையில் இருந்தபோது, கடைசி நேரத்தில் போபோ அதிரடி காட்டி 21-19 என செட்டைக் கைப்பற்றினார். இரண்டாவது செட்டிலும் தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்த போபோ, 21-16 என வெற்றி பெற்று பிரான்ஸ் அணியின் இறுதிப் போட்டி வாய்ப்பை உறுதி செய்தார்.

Advertisement

வெண்கலம்

வெண்கலப் பதக்கத்துடன் விடைபெற்ற இந்தியா

முன்னதாக காலிறுதிப் போட்டியில் வலுவான சீன தைபே அணியை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியிருந்தது. ஆனால், அரையிறுதியில் பிரான்ஸ் அணியின் அபாரமான வேகத்திற்கும் துல்லியமான ஆட்டத்திற்கும் ஈடுகொடுக்க முடியாமல் இந்தியா தடுமாறியது. 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற பிரான்ஸ் அணி முதன்முறையாகத் தாமஸ் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறிச் சாதனை படைத்துள்ளது. இந்தியா வெண்கலப் பதக்கத்துடன் தனது பயணத்தை நிறைவு செய்தது.

Advertisement