பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் 2023 : ஆஸ்திரேலிய அணிக்கு இந்தியாவில் விளையாட பயம்! முன்னாள் வீரர் முகமது கைஃப் பேட்டி!
பிப்ரவரி 9 ஆம் தேதி தொடங்கும் பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் டிராபிக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணியைப் பற்றி முன்னாள் இந்திய ஜாம்பவான் முகமது கைஃப் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில், ஆஸ்திரேலிய அணி பயத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா இந்தியா வந்துள்ள நிலையில், முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட், 2004 ரிக்கி பாண்டிங் அணியுடன் ஒப்பிட்டு, ஆஸ்திரேலியா தான் வெல்லும் எனக் கூறியிருந்தார். அதற்கு பதிலடியாக கைஃப், ஆஸ்திரேலியா இதுவரை இல்லாத அளவில் 18 வீரர்களுடன் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது என்றும், இதுவே அவர்கள் பீதியில் இருப்பதை காட்டுகிறது என்றும் கூறினார். மேலும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான அணி வலுவானது என்றாலும், இந்தியாவை இந்தியாவில் வைத்து வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா vs ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி ஒப்பீடு
இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் 1947-48ல் முதல் சந்திப்பிலிருந்து 27 டெஸ்ட் தொடர்களில் விளையாடியுள்ளன. இதில், ஆஸ்திரேலியா 12 தொடர் வெற்றிகளுடன் முன்னிலையில் உள்ளது. இந்தியா 10 தொடரில் வென்றுள்ளது. ஐந்து தொடர்கள் டிரா செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் வைத்து ஆஸ்திரேலியா இந்தியாவுடன் 14 டெஸ்ட் தொடர்களில் விளையாடியுள்ளது. இதில் இந்தியா 8-4 என முன்னிலையில் உள்ளது. இரண்டு தொடர்கள் டிராவில் முடிந்துள்ளன. பார்டர் கவாஸ்கர் தொடரை பொறுத்தவரை இந்தியாவில் எட்டு டெஸ்ட் தொடர்கள் விளையாடப்பட்டுள்ளன. இதில் இந்தியா 7-1 அதிக தொடர்களை கைப்பற்றி முன்னிலை பெற்றுள்ளது. மேலும் கடைசியாக நடந்த 2020-21 தொடரிலும், இந்தியா 2-1 என கைப்பற்றியுள்ளது.