பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் : பயிற்சி ஆட்டத்திற்கு பதிலாக ஆர்சிபி உதவியுடன் ஆஸ்திரேலிய அணி ஆயத்த முகாம்!
நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் பங்கேற்க ஆஸ்திரேலியா இந்தியா வந்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டியை நாக்பூரில் பிப்ரவரி 9 அன்று விளையாட உள்ளது. ஆனால் வழக்கமாக டெஸ்ட் போட்டிகளுக்கு முன்பு நடக்கும் பயிற்சி ஆட்டங்கள் இந்த முறை வேண்டாம் என ஆஸ்திரேலியா அறிவித்துவிட்டது. அதற்கு பதிலாக அந்த அணி பெங்களூரின் புறநகர் பகுதியில் உள்ள ஆலூரில் உள்ள தனிப்பயனாக்கப்பட்ட பிட்ச்களில் நான்கு நாள் ஆயத்த முகாமை நடத்த உள்ளார்கள். 2012ல் அலஸ்டர் குக்கின் இங்கிலாந்து அணிக்கு பிறகு, எந்தவொரு வெளிநாட்டு அணியும் இந்தியாவில் டெஸ்ட் தொடரை வெல்லாத நிலையில், அதை மாற்றிக் காட்டும் முனைப்புடன் பாட் கம்மின்ஸின் ஆஸ்திரேலிய அணி உள்ளது.
பயிற்சி ஆட்டங்களை புறக்கணித்ததன் பின்னணி
2013 இந்திய சுற்றுப்பயணத்தின் போது, ஆஸ்திரேலியா சென்னையில் இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடியது மற்றும் அந்த டெஸ்ட் தொடரில் 0-4 என ஒயிட்வாஷ் செய்யப்பட்டது. அதன் பிறகு 2017ல், இந்தியா ஏ அணிக்கு எதிராக விளையாடிய ஒரே பயிற்சி ஆட்டத்தில் விளையாடிய நிலையில், அந்த டெஸ்ட் தொடரில் 1-2 எனத் தோல்வியைத் தழுவியது. இதனால், பயிற்சி ஆட்டங்கள் தங்களுக்கு எந்த வகையிலும் கைகொடுப்பதில்லை என உணர்ந்துள்ள ஆஸ்திரேலிய அணி, இந்தமுறை ஆலூரில், இந்தியாவின் அனைத்துவிதமான பிட்ச் நிலைமைகளையும் எதிர்கொள்ள நான்கு நாட்கள் தீவிர பயிற்சி மேற்கொள்ள உள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு உதவுவதற்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு மற்றும் சுழல் பந்துவீச்சு ஆலோசகர் டேனியல் வெட்டோரி இணைந்துள்ளனர்.