2024இல் டி20 கிரிக்கெட்டில் 200 சிக்சர்கள்; புதிய மைல்கல்லை எட்டி இந்திய அணி சாதனை
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 61 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய கிரிக்கெட் அணி, இரண்டாவது போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. கியூபெர்ஹாவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 10) நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் பேட்டர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியாவின் வருண் சக்கரவர்த்தி சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், அது வெற்றிக்கு கைகொடுக்கவில்லை. இதற்கிடையே, இந்த போட்டியில் இந்தியா, 2024ல் டி20 போட்டிகளில் 200 சிக்சர்களை அடித்து புதிய சாதனை படைத்துள்ளது.
2024 இல் 200 சிக்சர்கள்
இந்த போட்டிக்கு முன், 2024 இல் இந்திய கிரிக்கெட் அணி 197 டி20 சிக்சர்களை அடித்திருந்தது. இந்நிலையில், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா ஒரு சிக்சர் அடித்து இந்தியாவின் ஒட்டுமொத்த சிக்சர் எண்ணிக்கையை 200 ஆக உயர்த்தினர். ஈஎஸ்பிஎன்கிரிக்இன்போவின் படி, மொத்தம் 32 வீரர்கள் இந்த ஆண்டு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக குறைந்தது ஒரு சிக்சராவது அடித்துள்ளனர். குறிப்பிடத்தக்கவகையில், இதே நாளில் இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியும் இதே சாதனையை எட்டியது. அவர்கள் இந்த ஆண்டில் அவர்கள் 201 சிக்சர்களை அடித்துள்ளனர். இந்த இரு அணிகள் மட்டுமே இந்த ஆண்டு 200 சிக்சர்கள் மைல்ஸ்டோனை எட்டியுள்ளனர்.