
புரோ கபடி லீக்: ஒழுங்கீனக் காரணங்களுக்காக தமிழ் தலைவாஸ் அணியிலிருந்து கேப்டன் பவன் செஹராவத் வெளியேற்றம்
செய்தி முன்னோட்டம்
புரோ கபடி லீக் தொடரின் நடுவே, தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டனும், இந்திய கபடி அணியின் தற்போதைய கேப்டனுமான பவன் செஹராவத், ஒழுங்கீனக் காரணங்களுக்காக வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார். இது அணியின் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ₹59.5 லட்சம் கொடுத்து அணிக்குத் திரும்ப வாங்கப்பட்ட 29 வயதான பவன் செஹராவத், தனது புதிய அணிக்காக முதல் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். இந்நிலையில், "ஒழுங்கீனக் காரணங்களுக்காக, பவன் செஹராவத் இந்த சீசனின் மீதமுள்ள போட்டிகளில் அணியில் இருந்து விலக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார். இந்த முடிவு அணியின் நடத்தை விதிகளுக்கு இணங்க, உரிய பரிசீலனைக்குப் பிறகு எடுக்கப்பட்டுள்ளது." என்று தமிழ் தலைவாஸ் அணி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
காரணம்
காரணம் வெளியிடப்படவில்லை
இந்த முடிவிற்கான குறிப்பிட்ட காரணம் எதுவும் வெளியிடப்படவில்லை. பவன் செஹராவத் இல்லாத நிலையில், பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு எதிரான நான்காவது போட்டியில், தமிழ் தலைவாஸ் அணி வெற்றிப் பாதைக்குத் திரும்பியது. இந்த வெற்றிக்கு, அணிக்குத் தற்காலிகக் கேப்டனாகச் செயல்பட்ட அர்ஜுன் தேஷ்வால் முக்கியக் காரணமாக இருந்தார். தேஷ்வால் அந்தப் போட்டியில் மட்டும் 17 புள்ளிகள் எடுத்து, அணியின் வெற்றிக்கு உதவினார். இது இந்த சீசனின் ஆரம்ப கட்டம் என்பதால், அணியின் பெஞ்சில் பவன் செஹராவத் போன்ற வலுவான ஆட்டக்காரர் இல்லாதபோதும், சிறப்பாகச் செயல்படக் கூடிய வீரர்கள் உள்ளனர் என்பதை தமிழ் தலைவாஸ் நிரூபித்துள்ளது.