டி20 உலகக் கோப்பையை வென்றதற்கான ரூ.125 கோடி பரிசுத் தொகையில் யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?
ரோஹித் ஷர்மா தலைமையிலான அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி டி20 உலகக் கோப்பையை வென்ற மறுநாளே, வெற்றி பெற்ற அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்தார். இதற்கான காசோலையை, மும்பையில் நடந்த வெற்றி விழாவில் அணி வீரர்களிடம் வழங்கினார். எனினும், பிசிசிஐ வழங்கும் ரொக்கப் பரிசான ரூ.125 கோடி எப்படிப் பிரிக்கப்படும் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. உலகக்கோப்பை போட்டிக்காக மொத்தம் 42 பேர் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சென்றனர். இதில் பிரதானமாக 15 முதல் அணி வீரர்களும், அவர்களுக்கான சப்போர்ட் ஸ்டாஃப் மற்றும் ரீசெர்வ் ஆகியோரும் அடங்குவர்.
பரிசு தொகை பங்கீடு எப்படி இருக்கும்?
இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கையின்படி, ஒரு ஆட்டத்தில் விளையாடாத வீரர்கள் உட்பட 15 வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் தலா 5 கோடி ரூபாய் பெறுவார்கள். பேட்டிங் நிபுணர் விக்ரம் ரத்தோர், பீல்டிங் பயிற்சியாளர் டி திலீப், பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே ஆகியோர் அடங்கிய கோர் கோச்சிங் குழுவுக்கு தலா ரூ.2.5 கோடி வழங்கப்படும். தலைவர் அஜித் அகர்கர் உட்பட மூத்த தேர்வுக் குழு உறுப்பினர்கள் தலா ரூ.1 கோடி பெறுவார்கள். நான்கு ரிசர்வ் வீரர்கள் - பேட்ஸ்மேன்கள் ரிங்கு சிங் மற்றும் சுப்மான் கில், மற்றும் பந்துவீச்சாளர்கள் அவேஷ் கான் மற்றும் கலீல் அகமது - தலா ரூ.1 கோடி பெறுவார்கள்.
சப்போர்ட் டீமிற்கும் வெகுமதியில் பங்கு
கூடுதலாக, மீதமுள்ள ஊழியர்களுக்கும் தாராளமாக வெகுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று பிசியோதெரபிஸ்ட்கள், மூன்று த்ரோடவுன் நிபுணர்கள், இரண்டு மசாஜ் செய்பவர்கள், வலிமை மற்றும் கண்டிஷனிங் பயிற்சியாளர் ஆகியோருக்கு தலா ரூ.2 கோடி வழங்கப்படும். இவர்களோடு அணியின் வீடியோ ஆய்வாளர், குழுவுடன் பயணித்த BCCI ஊழியர்கள், ஊடக அதிகாரிகள் உட்பட, அணியின் தளவாட மேலாளர் ஆகியோரும் வெகுமதிகளுடன் அங்கீகரிக்கப்படுவார்கள். வீரர்கள் மற்றும் சப்போர்ட் டீமிற்கும் அவர்களின் பரிசுத் தொகை குறித்து அறிவிக்கப்பட்டு விலைப்பட்டியல் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.