2026 டி20 உலகக்கோப்பை அட்டவணை வெளியீடு: எப்போது, எங்கே பார்க்கலாம்?
செய்தி முன்னோட்டம்
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள மிகவும் எதிர்பார்க்கப்படும் 2026 டி20 உலகக்கோப்பைக்கான அட்டவணை விவரங்கள் செவ்வாய் கிழமை (நவம்பர் 25) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று ஒளிபரப்பு உரிமையாளர்களான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தியா மற்றும் இலங்கை கூட்டாக நடத்தும் இந்தத் தொடருக்காக இந்தியாவில் அகமதாபாத், டெல்லி, கொல்கத்தா, சென்னை மற்றும் மும்பை ஆகிய ஐந்து இடங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இலங்கையில் கொழும்பில் இரண்டு இடங்களிலும், கண்டி நகரில் ஒரு இடத்திலும் போட்டிகள் நடைபெறவுள்ளன.
அணிகள்
முதல்முறையாக 20 அணிகள்
இந்த உலகக்கோப்பையில் முதல்முறையாக மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகள் தலா ஐந்து கொண்ட நான்கு குழுக்களாகப் பிரிக்கப்படும். ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் எட்டு சுற்றுக்குத் தகுதி பெறும். பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கும் இந்தத் தொடரின் இறுதிப் போட்டி, மார்ச் 8ஆம் தேதி நடைபெறும் என்று தற்காலிகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்புச் சாம்பியனான இந்தியா மற்றும் இலங்கையுடன், 2024 டி20 உலகக்கோப்பையில் முதல் ஏழு இடங்களைப் பிடித்த அணிகள் மற்றும் டி20 தரவரிசை அடிப்படையில் நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து போன்ற அணிகள் உட்பட மொத்தம் 20 அணிகளும் இந்தத் தொடருக்காகத் தகுதி பெற்றுள்ளன.
அட்டவணை
அட்டவணை வெளியீட்டு நிகழ்வு
அட்டவணை வெளியீட்டு நிகழ்வு நாளை செவ்வாய் கிழமை இந்திய நேரப்படி மாலை 6:30 மணி முதல் நேரலையாக ஒளிபரப்பப்பட உள்ளது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்படுவதுடன், ஜியோஹாட்ஸ்டார் தளத்திலும் நேரலையில் காணலாம். இந்த அட்டவணை வெளியீட்டு நிகழ்வில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மா, தற்போதைய டி20 கிரிக்கெட் கேப்டன் சூர்யகுமார் யாதவ், மகளிர் உலகக் கோப்பை வென்ற கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் இலங்கையின் முன்னாள் கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.