'ஒன்னு இந்தியாவுக்கு வாங்க, இல்லன்னா கிளம்புங்க!' வங்கதேசத்திற்கு ஐசிசி கொடுத்த ஷாக்... பின்னணி என்ன?
செய்தி முன்னோட்டம்
2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் ஒரு மிகப்பெரிய சிக்கல் எழுந்துள்ளது. பாதுகாப்பு காரணங்களைக் கூறி இந்தியாவில் விளையாட வங்கதேச கிரிக்கெட் வாரியம் மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அந்த நாட்டு வாரியத்திற்கு ஒரு கிடுக்கிப்பிடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. வரும் ஜனவரி 21 ஆம் தேதிக்குள் வங்கதேசம் தனது இறுதி முடிவை அறிவிக்க வேண்டும் என்று ஐசிசி கெடு விதித்துள்ளது.
மறுப்பு
இந்தியா வர மறுப்பது ஏன்?
வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் மற்றும் அங்கு சிறுபான்மையினருக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் காரணமாக, இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மானின் ஐபிஎல் ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரியது. இதனால் ஆத்திரமடைந்த வங்கதேச வாரியம், இந்தியாவில் விளையாட தங்கள் வீரர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று கூறி, தங்களது போட்டிகளை இலங்கைக்கு அல்லது வேறொரு நாட்டிற்கு மாற்றக் கோரியது. மேலும், ஐபிஎல் ஒளிபரப்பிற்கும் அந்த நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி
ஐசிசியின் அதிரடி முடிவு
வங்கதேசத்தின் கோரிக்கையை முற்றிலுமாக நிராகரித்துள்ள ஐசிசி, ஏற்கனவே திட்டமிட்டபடி போட்டிகள் இந்தியாவில்தான் நடக்கும் என்று உறுதிபடத் தெரிவித்துள்ளது. ஜனவரி 21 ஆம் தேதிக்குள் இந்தியா வந்து விளையாட ஒப்புக்கொள்ளாவிட்டால், வங்கதேச அணி உலகக்கோப்பையிலிருந்து நீக்கப்படும் என்றும், அவர்களுக்குப் பதிலாகத் தகுதிப் பட்டியலில் உள்ள வேறொரு அணி சேர்க்கப்படும் என்றும் ஐசிசி எச்சரித்துள்ளது. ஹைப்ரிட் மாடல் போன்ற எந்த சலுகையும் வங்கதேச கிரிக்கெட் அணிக்கு வழங்கப்படாது என்பதில் ஐசிசி உறுதியாக உள்ளது.
கருத்து
முன்னாள் வீரர்களின் கருத்து
இந்த விவகாரத்தில் வங்கதேச அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் தமீம் இக்பால் தனது நாட்டின் கிரிக்கெட் வாரியத்திற்கு ஒரு முக்கிய ஆலோசனையை வழங்கியுள்ளார். "உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல், வங்கதேச கிரிக்கெட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு புத்திசாலித்தனமான முடிவை எடுக்க வேண்டும். இன்று எடுக்கும் தவறான முடிவு அடுத்த 10 ஆண்டுகால வங்கதேச கிரிக்கெட்டைப் பாதிக்கும்" என்று அவர் எச்சரித்துள்ளார். இதற்கிடையில், வீரர்களை அவமதித்ததாக வங்கதேச வாரியத்தின் ஒரு இயக்குனர் நீக்கப்பட்டதும் அந்த நாட்டு கிரிக்கெட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.