மீண்டும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்குத் திரும்பினார் தமிழக வீரர் நடராஜன்
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2027 தொடருக்கான முன்னேற்பாடுகள் இப்போதே சூடுபிடித்துள்ள நிலையில், தமிழகத்தை சேர்ந்த நட்சத்திர இடதுகை வேகப்பந்து வீச்சாளர் தங்கராசு நடராஜனை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மீண்டும் தங்களது பாசறைக்குக் கொண்டுவந்துள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் மேற்கொள்ளப்பட்ட வீரர் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு ஈடாக ஹைதராபாத் அணியைச் சேர்ந்த இளம் சுழற்பந்து வீச்சாளர் ஜீஷன் அன்சாரி டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மறுவருகை
ரூ.5 கோடி ஒப்பந்தமும் நடராஜனும்
கடந்த 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் நடராஜனை டெல்லி கேப்பிடல்ஸ் அணி ரூ.10.75 கோடிக்கு ஏலம் எடுத்திருந்தது.
தற்போது ஏற்பட்டுள்ள புதிய ஒப்பந்தத்தின்படி, திருத்தப்பட்ட தொகையான ரூ.5 கோடிக்கு நடராஜன் மீண்டும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இணைகிறார்.
அதேநேரம், ஜீஷன் அன்சாரி தனது தற்போதைய ஒப்பந்தத் தொகையான ரூ.40 லட்சத்துடனேயே டெல்லி அணியில் நீடிக்கவுள்ளார்.
2020 முதல் 2024 வரை சன்ரைசர்ஸ் அணியின் முன்னணி பந்துவீச்சாளராக வலம் வந்த நடராஜன், 2024 சீசனில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கு முக்கியத் தூணாகத் திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
இதுவரை 73 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள நடராஜன் 72 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது யார்க்கர் திறமையால் எதிரணிகளை மிரட்டியுள்ளார்.
டெல்லி அணி
டெல்லி அணியில் இணையும் ஜீஷன் அன்சாரி
மறுபுறம், டெல்லி அணிக்கு செல்லும் 26 வயதான உத்தரபிரதேச லெக் ஸ்பின்னர் ஜீஷன் அன்சாரி, கடந்த 2025 சீசனில் சன்ரைசர்ஸ் அணிக்காக 10 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
தனது அறிமுகப் போட்டியிலேயே டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர்.
2026 சீசனில் அணியில் தக்கவைக்கப்பட்ட போதிலும் அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்காத சூழலில், தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் புதிய வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
தனது பழைய கோட்டையான ஹைதராபாத் அணிக்கு யார்க்கர் கிங் நடராஜன் மீண்டும் திரும்பியிருப்பது SRH மற்றும் தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.