21-ஆம் நூற்றாண்டின் டாப் 10 பவுலர்கள்: ஜாம்பவான்களை முந்தி பும்ரா சாதனை
செய்தி முன்னோட்டம்
நவீன கிரிக்கெட் உலகின் 21-ஆம் நூற்றாண்டுக்கான டாப் 10 தலைசிறந்த டெஸ்ட் பந்துவீச்சாளர்களின் பட்டியலை இங்கிலாந்து அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர்-பேட்டர் ஜோஸ் பட்லர் மற்றும் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ளனர். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பல உலக சாதனைகளைப் படைத்த மாபெரும் ஜாம்பவான்களைப் பின்னுக்குத் தள்ளி, இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா இப்பட்டியலில் 3-வது இடத்தைப் பிடித்து பெருமை சேர்த்துள்ளார்.
பவுலர்கள்
ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வார்னே முதலிடத்தில்
பட்லர் மற்றும் பிராட் இணைந்து நடத்தி வரும் 'ஃபார் தி லவ் ஆஃப் கிரிக்கெட்' என்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சியின் போது இந்தத் தரவரிசைப் பட்டியல் இறுதி செய்யப்பட்டது.
இதில், சுழற்பந்து வீச்சின் முடிசூடா மன்னனாக திகழ்ந்து மறைந்த ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வார்னே முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சு சாதனையாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 2-வது இடத்தைப் பிடித்துள்ள நிலையில், தனது அசாத்திய யார்க்கர்கள் மற்றும் வேரியேஷன்களால் உலக பேட்டர்களை அச்சுறுத்தி வரும் இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா 3-வது இடத்தைப் பெற்று சர்வதேச அளவில் தனக்கான ஆதிக்கத்தை மீண்டும் நிரூபித்துள்ளார்.
மற்ற வீரர்கள்
மெக்ராத், முரளிதரனை முந்திய பேட் கம்மின்ஸ்
ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஜாம்பவான் கிளென் மெக்ராத் 4-வது இடத்தையும், ஆஸ்திரேலிய அணியின் தற்போதைய கேப்டன் பேட் கம்மின்ஸ் 5-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட்டில் 800 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்துள்ள இலங்கை சுழல் மன்னன் முத்தையா முரளிதரன் 6-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.
அடுத்தடுத்த இடங்களில் தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர்கள் டேல் ஸ்டெய்ன் 7-வது இடத்திலும், ககிசோ ரபாடா 8-வது இடத்திலும், ஷான் பொல்லாக் 9-வது இடத்திலும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 10-வது இடத்தைப் பிடித்துள்ளார்.