ஒருநாள் உலகக்கோப்பை தகுதிச் சுற்றுக்கான இலங்கை அணியில் மதீஷா பத்திரனா சேர்ப்பு
ஜிம்பாப்வேயில் நடைபெறவுள்ள ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தகுதிச் சுற்றுக்கான 15 பேர் கொண்ட அணியை இலங்கை கிரிக்கெட் வாரியம் வெள்ளிக்கிழமை (ஜூன் 9) அறிவித்தது. ஐபிஎல் 2023 தொடரில் சிறப்பாக செயல்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வீரரான மதீஷா பத்திரனாவுக்கு இந்த அணியில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. மதீஷா பத்திரனா, ஐபிஎல் 2023 இல் 19 விக்கெட்டுகளை கைப்பற்றியதோடு, டெத் ஓவர்களில் மிகச் சிறப்பாக செயல்பட்டு, சென்னை சூப்பர் கிங்ஸ் ஐந்தாவது பட்டத்தை வெல்வதில் முக்கிய பங்கு வகித்தார். இதில் ஈர்க்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் வாரியம், ஐபிஎல்லுக்கு பிறகு நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் வாய்ப்பு கொடுத்தனர். இந்நிலையில், ஒருநாள் உலகக்கோப்பைக்கான தகுதிச் சுற்றிலும் இடம் கொடுக்கப்பட்டு உள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் பட்டியல்
மதீஷா பத்திரன மட்டுமல்லாது 29 வயதான துஷான் ஹேமந்தவுக்கும் இந்த அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இவரும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அறிமுகமாகி ஒரே ஒரு சர்வதேச போட்டியில் மட்டும் விளையாடியுள்ளார். ஜூன் 18 ஆம் தேதி தொடங்கும் இந்த தகுதிச் சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள், அக்டோபரில் நடக்கும் ஒருநாள் உலகக்கோப்பையில் பங்கேற்கும் வாய்ப்பை பெறும். இலங்கை அணி : தசுன் ஷனக, குசல் மெண்டிஸ், திமுத் கருணாரத்ன, பதும் நிஸ்ஸங்க, சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா, சதீர சமரவிக்ரம, வனிந்து ஹசரங்க, சாமிக கருணாரத்ன, துஷ்மந்த சமீர, கசுன் குமார் ராஜித, மஹின ரஜித , மதீஷ பத்திரன, துஷான் ஹேமந்த.