'கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்..' : தோனியின் பெருந்தன்மை குறித்து ஸ்ரீசாந்த் புகழாரம்
இரண்டு உலகக்கோப்பைகளில் ஒன்றாக விளையாடியிருந்தாலும், எம்எஸ் தோனியிடம் தான் பல விஷயங்களில் முரண்பட்டு இருந்ததாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட் அணியை வெற்றிகரமாக மாற்றிய ஜாம்பவான்களின் என்றும் நிலைத்திருக்கும் பெயரான எம்எஸ் தோனி, எப்போதும் தனது புதிரான கேப்டன்சிக்காக அதிகம் அறியப்படுகிறார். அவர் இந்தியாவுக்காக 2007இல் டி20 உலகக்கோப்பை, 2011இல் ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் 2013இல் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பட்டம் என மூன்று ஐசிசி பட்டங்களை இந்தியாவுக்கு பெற்றுக் கொடுத்துள்ளார். இந்நிலையில், 2007 மற்றும் 2011 உலகக்கோப்பைகளில் அவருடன் ஒன்றாக விளையாடிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் எம்எஸ் தோனியுடன் பணியாற்றிய விதம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
தோனியின் பெருந்தன்மை குறித்து ஸ்ரீசாந்த் புகழாரம்
ஸ்போர்ட்ஸ்கீடாவில் பேசிய ஸ்ரீசாந்த், தனக்கும் எம்எஸ் தோனிக்கும் எப்போதும் கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தாலும், அவர் ஒருபோதும் தன்னை ஆதரிக்கவில்லை எனக் கூற முடியாது என்று தெரிவித்தார். மேலும் உலகக்கோப்பை வெற்றிக்கு அணியில் பலர் பங்களித்திருந்தாலும், தோனியை மட்டும் புகழ்வது சரிதான் என்று தெரிவித்துள்ள ஸ்ரீசாந்த், அவர் ஒருபோதும் புகழ் வெளிச்சத்தை விரும்பியதில்லை என்றும் அவர் அணி குறித்து சிந்திப்பது மிகவும் வித்தியாசமானது என்றும் கூறினார். மேலும், அணி கோப்பையை வெல்லும்போது, அதை புதிய வீரரின் கையால் பெறும் கலாச்சாரத்தையும் இந்திய அணியில் தோனி தான் தொடங்கி வைத்தார் என்பதையும் தெரிவித்தார். முன்னதாக, சமீபத்தில் அணிக்காக தனது பேட்டிங்கை எம்எஸ் தோனி தியாகம் செய்தார் என்பதை கவுதம் காம்பிர் கூறியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.