Sports Round Up : முக்கிய விளையாட்டுச் செய்திகள்
சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 1) இந்தியா 15 பதக்கங்களைக் கைப்பற்றியது. இதில் தடகள போட்டியில் மட்டும் இந்தியா மொத்தம் இரண்டு தங்கம், நான்கு வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களைக் கைப்பற்றியது. தடகளத்தில் தஜிந்தர்பால் சிங் டூர் குண்டு எறிதலிலும், அவினாஷ் சேபிள் 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டியிலும் தங்கம் வென்றார். மகளிர் 100 மீட்டர் தடை ஓட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை ஜோதி யர்ராஜி முதலில் வெண்கலம் வென்ற நிலையில், இரண்டாவது இடத்தைப் பிடித்த சீனாவின் வு யானி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அவருக்கு வெள்ளிப்பதக்கம் வழங்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக எட்டாவது நாள் முடிவில் இந்தியா 53 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.
அக்டோபர் 4 ஆம் தேதி ஒருநாள் உலகக்கோப்பை தொடக்க விழா
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை அக்டோபர் 5ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், போட்டிக்கு ஒருநாள் முன்னதாக, அக்டோபர் 4 அன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பிரமாண்ட தொடக்க விழா நடைபெறவுள்ளது. அக்டோபர் 4 கேப்டன்கள் தினமாக இருக்கும். அதைத் தொடர்ந்து அன்று மாலை 7 மணிக்கு பிரமாண்டமான தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த தொடக்க விழாவில் ரன்வீர் சிங், பிரபல பாடகர்கள் ஸ்ரேயாஸ் கோஷல், அரிஜித் சிங் மற்றும் ஆஷா போஸ்லே உள்ளிட்ட பல பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். மேலும், இந்திய பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் லேசர் ஷோ மற்றும் வானவேடிக்கைகளும் நடைபெற உள்ளது. இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து தொடக்கப் போட்டிக்கு டிக்கெட் வாங்கியவர்கள் விழாவில் கலந்து கொள்ளலாம்.
ஆசிய விளையாட்டுப் போட்டி : மகளிர் கோல்ஃப் போட்டியில் வரலாறு படைத்த அதிதி அசோக்
இந்தியாவின் நட்சத்திர கோல்ஃப் வீராங்கனை அதிதி அசோக், ஞாயிற்றுக்கிழமை ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான தனிநபர் பிரிவில் வெள்ளி வென்று வரலாறு படைத்தார். ஆசிய விளையாட்டு வரலாற்றில் இதுவரை இந்திய மகளிர் கோல்ஃப் வீரர்கள் பதக்கம் வென்றதில்லை. முன்னதாக, போட்டியின் முதல் மூன்று சுற்றுகளில் முதலிடத்தில் இருந்து தங்கத்திற்கான வாய்ப்பை கொண்டிருந்த அதிதி, கடைசி சுற்றில் பின்னடைவை சந்தித்து தாய்லாந்து வீராங்கனையிடம் தங்கத்தை இழந்தார். முன்னதாக, லக்ஷ்மண் சிங் (1982) மற்றும் ஷிவ் கபூர் (2002) ஆகியோர் ஆசிய விளையாட்டு கோல்ஃப் நிகழ்வில் இரண்டு தங்கம் வென்றுள்ளனர். மேலும், இந்தியாவின் மிக சமீபத்திய கோல்ஃப் பதக்கம் 2010 இல் சீனாவில் நடந்த குவாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
ஆசிய விளையாட்டுப் போட்டி : 3000மீ ஆடவர் ஸ்டீபிள் சேஸ் போட்டியில் தங்கம் வென்ற அவினாஷ் சேபிள்
சீனாவின் ஹாங்சோவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டி 2023ல் ஞாயிற்றுக்கிழமை அவினாஷ் சேபிள், 3000மீ ஆடவர் ஸ்டீபிள் சேஸ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற வரலாறு படைத்தார். அவினாஷ் 8.19.54 நிமிடங்களில் கடந்து முதல் இடத்தைப் பிடித்தார். ஆசிய விளையாட்டுப் போட்டி 2023இல் இந்தியா தடகள போட்டியில் பெற்ற முதல் தங்கமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. அவினாஷ் ஃபினிஷிங் லைனைக் கடக்கும் போது ஃபிரேமில் யாரும் தென்படாத அளவுக்கு மற்றவர்களை விட மிகவும் முன்னேறி இருந்தார். இதனால், தான் வெற்றி பெறப்போகிறோம் என்பதை முன்கூட்டியே கணித்துவிட்ட அவினாஷ், எல்லைக் கோட்டிற்கு சுமார் 15 மீட்டர் முன்னதாகவே வெற்றிக் கொண்டாட்டத்தைத் தொடங்கிவிட்டார்.
ஆசிய விளையாட்டுப் போட்டி : பேட்மிண்டனில் வெள்ளி வென்று வரலாறு படைத்த இந்தியா
ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டி பேட்மிண்டன் அணி பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வியைத் தழுவி வெள்ளி வென்றது. இந்தியாவின் லக்ஷ்யா மற்றும் சிராக்-சாத்விக் தங்களுடைய ஆட்டங்களில் வெற்றி பெற்றதால் தொடக்கத்தில் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றது. எனினும் அதன் பின்னர், கிடாம்பி ஸ்ரீகாந்த், மிதுன் மஞ்சுநாதன் மற்றும் துருவ் கபிலா-சாய் பிரதீப் ஜோடி அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தது. இதனால், இந்தியா இறுதியில் 2-3 என்ற செட் கணக்கில் சீனாவிடம் தோல்வியடைந்தது. இதன் மூலம் வெள்ளியுடன் விடைபெற்றாலும், ஆசிய விளையாட்டுப் போட்டி பேட்மிண்டனில் முதல் பதக்கத்தைக் கைப்பற்றி வரலாறு படைத்தது.