Sports Round Up : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்; வாலிபால் அணி அபாரம்; டாப் விளையாட்டுச் செய்திகள்
வியாழக்கிழமை (செப்டம்பர் 21) நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டி மகளிர் கிரிக்கெட்டில் மலேசியாவுக்கு எதிராக போட்டியிட்ட இந்திய கிரிக்கெட் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் ஷெஃபாலி வர்மா அரை சதமடித்து 67 ரன்களும், ஜெமிமா ரோட்ரிகஸ் 47 ரன்களும் எடுத்தனர். இடையில் மழை பெய்ததால் போட்டி தலா 15 ஓவர்களாக குறைக்கப்பட்ட நிலையில் இந்திய அணி 15 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. இதையடுத்து மலேசியா பேட்டிங்கைத் தொடங்கி 15 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மீண்டும் மழை குறுக்கிட போட்டி ரத்து செய்யப்பட்டு, தரவரிசையில் முன்னிலையில் உள்ள இந்தியா அரையிறுதிக்கு முன்னேறுவதாக அறிவிக்கப்பட்டது.
வங்கதேச கிரிக்கெட் அணியின் தொழில்நுட்ப ஆலோசகராக ஸ்ரீதரன் ஸ்ரீராம் நியமனம்
அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்க உள்ள ஒருநாள் உலகக்கோப்பைக்காக வங்கதேச கிரிக்கெட் அணியின் தொழில்நுட்ப ஆலோசகராக சென்னையைச் சேர்ந்த ஸ்ரீதரன் ஸ்ரீராம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். செப்டம்பர் 27 ஆம் தேதி குவாஹாத்தியில் அவர் வங்கதேச கிரிக்கெட் அணியில் இணைந்து, இந்திய மைதானங்களின் நிலைமைகள் குறித்து வங்கதேச அணிக்கு ஆலோசனைகள் வழங்குவார் எனக் கூறப்படுகிறது. ஒருநாள் உலகக்கோப்பைக்காக அறிவிக்கப்பட்டுள்ள வங்கதேச அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களில் பலருக்கு இந்திய மைதானங்களில் விளையாடிய அனுபவம் இல்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீதரன் ஸ்ரீராம் ஏற்கனவே 2022இல் வங்கதேச கிரிக்கெட் அணியின் தொழில்நுட்ப ஆலோசகராகவும், அணியின் தலைமை பயிற்சியாளராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டுள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டி கால்பந்தில் இந்திய ஆடவர் அணி வெற்றி; மகளிர் அணி தோல்வி
வியாழக்கிழமை (செப்டம்பர் 21) நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியின் கால்பந்து ஆட்டத்தில் இந்திய ஆடவர் கால்பந்து அணி வங்கதேசத்தை எதிர்கொண்டது. இரு அணிகளும் தங்களது முந்தைய போட்டியில் தோல்வியைத் தழுவியதால், அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைக்க, இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் போட்டி பரபரப்பாக இருந்தது. ஆட்டத்தின் கடைசி நேரத்தில் இந்தியாவின் கேப்டன் சுனில் சேத்ரி கோல் அடிக்க, 1-0 என்ற கோல் கணக்கில் இந்தியா வங்கதேசத்தை வீழ்த்தியது. இதற்கிடையே மகளிர் கால்பந்தில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் சீன தைபேயை எதிர்த்து 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது.
INDvsAUS: முதல் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஸ்டார்க், கிளென் மேக்ஸ்வெல் நீக்கம்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடருக்கு முன்னதாக, இந்தியாவில் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 22) நடைபெற உள்ள நிலையில், இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் கிளென் மேக்ஸ்வெல் மற்றும் மிட்செல் ஸ்டார்க் இடம்பெற மாட்டார்கள் என அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் அறிவித்துள்ளார். இருவரும் காயத்திலிருந்து முழுமையாக குணமடையாததால் சேர்க்கப்படவில்லை எனக் கூறப்படும் நிலையில், தென்னாப்பிரிக்க தொடரில் இடம்பெறாத ஸ்டீவ் ஸ்மித் இந்த போட்டியில் இடம் பெறுவார் என்றும் விளையாடும் லெவனில் சேர்க்கப்படுவார் என்றும் பாட் கம்மின்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்திய வாலிபால் அணி வரலாற்று வெற்றி
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வாலிபால் அணி வலிமை வாய்ந்த தென்கொரியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. முன்னதாக, தனது முதல் போட்டியில் கம்போடியாவை வீழ்த்திய இந்தியா, இரண்டாவது போட்டியில், முந்தைய சீசனில் வெள்ளிப் பதக்கம் வென்ற வலுவான தென்கொரியாவை எதிர்கொண்டது. இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடிய நிலையில், இந்தியா இறுதியில் 3-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தனது குழுவில் முதலிடம் பிடித்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்திய வாலிபால் அணி கடைசியாக 1986இல் வெண்கலம் வென்றதே உச்சகட்டமாக உள்ள நிலையில், இந்த முறை நிச்சயம் பதக்கம் வெல்லும் முனைப்புடன் உள்ளது.