Sports Round Up: இந்திய பாய்மர படகு அணி இறுதிப்போட்டிக்கு தகுதி; தரவரிசையில் முகமது சிராஜ் முதலிடம்; டாப் விளையாட்டு செய்திகள்
ஆசிய விளையாட்டுப் போட்டியில் புதன்கிழமை (செப்டம்பர் 20) நடந்த பாய்மர படகு போட்டியின் பல்வேறு பிரிவுகளில் இந்திய அணியினர் சிறப்பாக செயல்பட்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர். மகளிர் காக்ஸ்லெஸ் ஃபோர், ஆடவர் காக்ஸ்லெஸ் பேர், ஆடவர் மற்றும் மகளிர் காக்ஸ்ட் எயிட் போட்டிகளில் இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. மேலும், இது தவிர 6 பிரிவுகளில் இந்திய பாய்மர படகு அணி இறுதிப்போட்டிக்கான தகுதிச் சுற்று மற்றும் அரையிறுதி போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் பாய்மர படகு பிரிவில் 14 போட்டிகள் நடைபெறும் நிலையில், இந்தியா 12 போட்டிகளில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் ஆண்டிம் பங்கால் முதல் சுற்றில் வெற்றி
செர்பியாவில் நடைபெற்று வரும் மல்யுத்த உலக சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனை ஆண்டிம் பங்கால் முதல் சுற்றில் வெற்றி பெற்றார். புதன்கிழமை (செப்டம்பர் 20) நடைபெற்ற 53 கிலோ எடைப்பிரிவில் நடப்பு சாம்பியன் ஒலிவியா டொமினிக் பாரிஷை எதிர்கொண்டார். ஆரம்பத்தில் 0-2 என பின்தங்கினாலும், பின்னர் வலிமையுடன் போராடி 3-2 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். முன்னதாக இந்த போட்டியில் இந்தியா சார்பில் போட்டியிட்ட 15 பேர் ஏற்கனவே தோற்று வெளியேறினர். முன்னணி வீரர்கள் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பிசியாக இருப்பதால், இளம் வீரர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.
ஐசிசி ஒருநாள் பந்துவீச்சு தரவரிசையில் முகமது சிராஜ் முதலிடம்
ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய கிரிக்கெட் அணி வீரர் முகமது சிராஜ், ஐசிசி ஒருநாள் பந்துவீச்சு தரவரிசையில் 8 இடங்கள் முன்னேறி முதலிடம் பிடித்துள்ளார். முன்னதாக ஒன்பதாவது இடத்தில் இருந்த அவர், ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கைக்கு எதிராக 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் தரவரிசையில் சரசரவென முன்னேற்றம் கண்டுள்ளார். எனினும் பந்துவீச்சு தரவரிசையில் குல்தீப் யாதவ் மூன்று இடங்கள் பின்தங்கி ஒன்பதாவது இடத்தில் உள்ளார். இதற்கிடையே பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் ஷுப்மன் கில் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார். விராட் கோலி ஒரு இடம் முன்னேறி எட்டாவது இடத்தில் உளளார். ஆல்ரவுண்டர் தரவரிசையில் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா ஒரு இடம் முன்னேறி ஆறாவது இடத்தில் உள்ளார்.
ஒருநாள் உலகக்கோப்பை 2023 : இந்திய அணிக்கு புது ஜெர்சி அறிமுகம்
அக்டோபர் 5 ஆம் தேதி இந்தியாவில் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடங்க உள்ள நிலையில், இதில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணிக்கு புது ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் கிட் ஸ்பான்சர் அடிடாஸ் வெளியிட்டுள்ள ஜெர்சியில் வெள்ளை கோடுகள் நீக்கப்பட்டு மூவர்ணக் கொடியுடன் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய அணியின் லோகோவில் உள்ள மூன்று ஸ்டார்களுக்கு பதிலாக, 1983 மற்றும் 2011 ஒருநாள் உலகக்கோப்பைகளை வென்றதன் நினைவாக இரண்டு ஸ்டார்கள் மட்டும் பொறிக்கப்பட்டுள்ளன. ஐசிசி போட்டிகளில் அணிகளின் ஜெர்சியின் முன்புறத்தில் முக்கிய ஸ்பான்சரின் லோகோவை பயன்படுத்த அனுமதியில்லை என்பதால் டிரீம் 11 என பெரிதாக எழுதப்பட்டுள்ளது.
ஒருநாள் உலகக்கோப்பைக்கான பாடலை அறிமுகம் செய்தது ஐசிசி
இந்தியாவில் அக்டோபர் 5 ஆம் தேதி ஒருநாள் உலகக்கோப்பை தொடங்க உள்ள நிலையில், ஐசிசி இந்த தொடருக்கான அதிகாரப்பூர்வ பாடலை புதன்கிழமை (செப்டம்பர் 20) வெளியிட்டது. இந்த பாடலை பாலிவுட்டின் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவரான ப்ரீத்தம் உருவாக்கியுள்ளார். இதில் பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரன்வீர் சிங் நடித்துள்ளார். தில் ஜாஷ்ன் போலே என இந்த பாடலுக்கு தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும், புதன்கிழமை இந்த பாடலை ரன்வீர் சிங் வெளியிட்டுள்ளார். பாடல் அனைத்து விதமான இசை தளங்களிலும் கிடைக்கும் நிலையில், விரைவில் பிக் எஃப்எம் மற்றும் ரெட் எஃப்எம் ஆகியவற்றிலும் வெளியிடப்பட உள்ளது.