ஸ்போர்ட்ஸ் ரவுண்டுஅப்: இன்றைய முக்கிய செய்திகள்
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் இன்று மாலை சென்னையில் துவங்குகிறது. பிரதமர் மோடி இந்த போட்டி தொடரை துவக்கி வைக்க, வரும் ஜனவரி 31 ஆம் தேதி வரை இப்போட்டிகள் நடைபெறும். சென்னை தவிர, கோயம்பத்தூர், திருச்சி, மதுரை ஆகிய ஊர்களிலும் இப்போட்டிகள் நடைபெறும். இந்த முறை தமிழ்நாட்டில் இந்த போட்டிகள் நடைபெறுவதால், சொந்த மண்ணில் பதக்கங்களை அள்ள தமிழ்நாடு வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். தடகளம், ஸ்குவாஷ், நீச்சல், பளுதூக்குதல், வாள்வீச்சு மற்றும் ஜிம்னாஸ்டிக்ஸ் ஆகியவற்றில் பெரும்பாலான பதக்கங்களை வெல்ல வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு கருதுகிறது.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றுக்கு முன்னேறிய ரோஹன் போபண்ணா, மேத்யூ எப்டன் ஜோடி
மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி, தங்களது முதல் சுற்றில் ஆஸ்திரேலியாவின் டக்வொர்த், பால்மன்ஸ் ஜோடியை தோற்கடித்து, 2-வது சுற்றுக்கு முன்னேறியது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவெரேவ் ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறினர். முன்னதாக ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், இத்தாலியின் லோரென்சோ சோனேகோவை எதிர்த்து விளையாடினார். இதில் அல்கராஸ் 6-4, 6-7 (3-7), 6-3, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
இந்தியா ஓபன் பேட்மிண்டன்: காலிறுதி சுற்றுக்கு முன்னேறிய ஹெச்.எஸ்.பிரணாய்
டெல்லியில் நடைபெற்றுவரும், இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். முதல் சுற்றில், ஹெச்.எஸ்.பிரணாய், பிரியன்ஷு ரஜவத்துடன் மோதினார். இதில் ஹெச்.எஸ்.பிரணாய் 20 - 22, 21 -14, 21 -14 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றார். அதேபோல, ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக் சாய் ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடியும் காலிறுதி சுற்றிற்கு தகுதி பெற்றுள்ளது.
IND vs AFG டி 20 தொடர்: சூப்பர் ஓவர் பற்றி தொடரும் விவாதம்
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி இரண்டு சூப்பர் ஓவர்களில் விளையாடி வெற்றி பெற்றது. இதில் முதல் சூப்பர் ஓவரின் கடைசி பந்தில் தானாக வெளியேறி இருந்தார் இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா. எனினும், அவர் இரண்டாவது சூப்பர் ஓவரில் மீண்டும் பேட் செய்திருந்தார். அது சரியா, தவறா என்ற விவாதம் தற்போது எழுந்துள்ளது.
One World vs One Family டி20: ரசிகர்களை மீண்டும் ஆச்சரியத்தில் அசத்திய டெண்டுல்கர்
One World மற்றும் One Family அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் அபாரமாக விளையாடி, ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார். சச்சின், கடந்த 1989 முதல் 2013 வரை இந்தியா அணிக்காக விளையாடிய பின்னர் ஓய்வு பெற்றார். இந்த நிலையில், One World vs One Family டி20 போட்டி பெங்களுருவில் நடைபெற்று வருகிறது. ஏழு நாடுகளை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் 24 பேர் பங்கேற்கும் இந்த போட்டியில், One World அணியை சச்சினும், One Family அணியை யுவராஜ் சிங் தலைமை தாங்கி போட்டியிட்டனர். அந்த போட்டியில், சச்சின் 16 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் அடங்கும்.