ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
நேற்று நடைபெற்ற 2வது டி20 போட்டியில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிராக விளையாடிய ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர்களில் 130 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக தீப்தி சர்மா 30 ரன்கள் எடுத்தார். இதையடுத்து களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி 19 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 133 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என சமனில் உள்ளது.
சாதனை புரிந்த தீப்தி சர்மா
நேற்று நடைபெற்ற இந்தியா vs ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் போட்டியின் டி20 தொடரின் இரண்டாம் ஆட்டத்தில், ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது. இந்தியா சார்பாக விளையாடிய தீப்தி சர்மா, 30 ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகள் எடுத்தார். இதன் மூலம் சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் 1,000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் இந்திய வீராங்கனை என்ற புதிய சாதனையை தீப்தி சர்மா படைத்துள்ளார். அவர் இதுவரை 103 டி20 போட்டிகளில் ஆடி 1,001 ரன்களும், 112 விக்கெட்டுகளும் வீழ்த்தி உள்ளார்.
முதல் தர கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் 4 -ஆம் இடத்தில் புஜாரா
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் 'ஏ' பிரிவில் ராஜ்கோட்டில் நடக்கும் ஜார்கண்டுக்கு எதிரான ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சவுராஷ்டிரா அணி 2-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 406 ரன்கள் எடுத்திருந்தது. அதில் கடைசிவரை புஜாரா (157 ரன்), பிரேராக் மன்கட் (23 ரன்) அவுட் ஆகாமல் இருந்தனர். இந்த தொடரில் அபாரமாக ஆடிய புஜாரா முதல்தர கிரிக்கெட்டில் தனது 17-வது இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார். ரஞ்சி கிரிக்கெட்டில் இது அவரது 8-வது இரட்டை சதமாக பதிவானது. இதன் மூலம், முதல் தர கிரிக்கெட்டில், அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில், வி.வி.எஸ்.லட்சுமணன்-ஐ (19,730 ரன்) பின்னுக்கு தள்ளி புஜாரா (19,813ரன்) 4ம் இடத்தில் உள்ளார்.
புரோ கபடி லீக் 10: 3 புள்ளிகளில் வெற்றியை தவறவிட்ட தமிழ் தலைவாஸ்
புரோ கபடி லீக் தொடரின் 10ஆவது சீசன் கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி அகமதாபாத்தில் துவங்கியது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு காளைகள், தபாங் டெல்லி, குஜராத் ஜெயிண்ட்ஸ், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ் என 12 அணிகள் இந்த தொடரில் இடம் பெற்றுள்ளன. இதில், தமிழ் தலைவாஸ் 10 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில், 2ல் வெற்றி, 8 போட்டிகளில் தோல்வியோடு புள்ளிப்பட்டியலில் 11ஆவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் தான் நேற்று நடந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் கடைசி வரை போராடிய தமிழ் தலைவாஸ் அணியானது 3 புள்ளிகளில் தோல்வி அடைந்தது.