Sports Round Up: 2-வது முறையாக சதம் அடித்து KL ராகுல் சாதனை; மற்றும் பல முக்கிய விளையாட்டுச் செய்திகள்
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் தொடரில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்று, தொடரை சமன் செய்துள்ளது. முதல் நாள் போட்டியில், தொடர்ந்து விக்கட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணி, நேற்று K.L.ராகுலின் அபார ஆட்டத்தினால், 67.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன் எடுத்தது. KL ராகுல், 101 ரன்கள் எடுத்து அணியின் இலக்கை உயர்த்தினார். தென்ஆப்பிரிக்காவில் உள்ள அதிவேக மைதானங்களில் ஒன்றான செஞ்சூரியனில் அவர் சதம் அடிப்பது இது 2-வது முறையாகும். ஏற்கனவே 2021-ம் ஆண்டு சுற்றுப்பயணத்தில் இதே மைதானத்தில் 123 ரன்கள் குவித்து இருந்தார். இதன் மூலம் செஞ்சூரியனில் ஒன்றுக்கு மேல் சதம் அடித்த முதல் வெளிநாட்டு பேட்ஸ்மேன் என்ற சாதனையை புரிந்துள்ளார்.
ப்ரோ கபடி லீக் : தமிழ் தலைவாஸ்-ஐ வீழ்த்தி வெற்றி பெற்றது குஜராத் டைட்டன்ஸ்
இந்த மாதம் 2 ஆம் தேதி தொடங்கிய 10-வது புரோ கபடி லீக் தொடரில், பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் மோதுகின்றன. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் இரு அணிகளும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் இறுதியில், தமிழ் தலைவாஸ் அணியை தோற்கடித்து, குஜராத் ஜெயன்டஸ் அணி, 33-30 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.
மகளிர் கிரிக்கெட்:முதலாவது ஒருநாள் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் இன்று நடைபெற உள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற உள்ள ஒரு நாள் கிரிக்கெட் தொடர், இந்திய நேரப்படி ஆட்டம் மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.
கிரிக்கெட்டில் கால் பதித்த நடிகர் சூர்யா
இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக்(ஐஎஸ்பிஎல்) தொடரில் தமிழ்நாடு அணியை வாங்கியதன் மூலம், கிரிக்கெட்டில் நடிகர் சூர்யா கால் பதித்துள்ளார். ஸ்ட்ரீட் கிரிக்கெட் மற்றும் ஸ்டேடியம் கிரிக்கெட்க்கு இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கும் நோக்குடனும், ஸ்ட்ரீட் கிரிக்கெட்டில் விளையாடுபவர்களின் திறமையை உலகிற்கு உணர்த்தும் நோக்கிலும், முதல்முறையாக அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 2ம் தேதி முதல் 9ம் தேதி வரை மும்பையில் இப்போட்டிகள் நடைபெறுகின்றன. ஆறு அணிகள் பங்கேற்கும் இத்தொடர், பத்து ஓவர் கொண்ட T10 போட்டிகளாக நடைபெறுகிறது. இத்தொடரில் மொத்தம் 19 போட்டிகள் நடைபெறுகின்றன.
முதல் டி20 போட்டி: சொந்த மண்ணில் நியூசிலாந்தை வீழ்த்திய வங்காளதேசம்
வங்காளதேச அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நேப்பியரில் நேற்று நடைபெற்றது. ஆட்டத்தின் இறுதியில், வங்காளதேசம் 18.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு137 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. மெஹிதி ஹசன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.