Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
செய்தி முன்னோட்டம்
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.
இத்தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி எளிதாக வீழ்த்தியிருந்தது. அதனைத் தொடர்ந்து, இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்க அணி இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்திருந்தது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 78 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து, நேற்றைய போட்டியை மட்டுமின்றி தென்னைப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரையும் கைப்பற்றியிருக்கிறது இந்தியா.
நேற்றைய போட்டியின் ஆட்டநாயகனாக சஞ்சு சாம்சனும், தொடரின் ஆட்ட நாயகனாக இந்திய வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஐபிஎல் 2024
ஏலத்தில் தவறான வீரரை வாங்கியது குறித்து பஞ்சாப் கிங்ஸ் அணி விளக்கம்:
ஐபிஎல் அணிகளுள் ஒன்றான பஞ்சாப் கிங்ஸ் அணியானது, ஏலத்தின் இறுதிச் சுற்றுகளில் தேசிய அணிக்காக விளையாடாத பல்வேறு இளம் இந்திய வீரர்களை வாங்கிக் குவித்தது.
அப்படி வாங்கும் போது, சஷாங்க் சிங் என் 32 வயது பேட்டரையும் 20 கோடி என்ற அடிப்படை விலையில் வாங்கியது பஞ்சாப்.
ஆனால், வாங்கிய சில நிமிடங்களிலேயே, தாங்கள் வாங்க நினைத்த வீரர் இவர் இல்லை எனவும், அதனை மாற்றிக் கொள்ள முடியுமா எனவும் பஞ்சாப் அணி கேட்டுக் கொண்டது சர்ச்சையானது.
அதன்படி, சஷாங்க் சிங் என்ற 19 வயது இளம் வீரரை வாங்கவே தாங்கள் திட்டமிட்டதாகவும், அதே பெயரில் இருந்த வேறு ஒரு வீரரை தவறாக வாங்கி விட்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறது.
மல்யுத்தம்
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் புதிய தலைவராக பிரிஜ் பூஷன்:
பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய பிரிஜ் பூஷனுக்கு அடுத்தபடியாக இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மல்யுத்த வீரர்களின் ஆதரவு பெற்ற அனிதா ஷெரானை விட 33 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார் பிரிஜ் பூஷனின் ஆதரவாளரான சஞ்சய் சிங்.
மொத்தம் இருந்த 50 ஓட்டுகளில், 47 பேர் வாக்களித்திருந்தனர். இந்த 47 ஓட்டுக்களில் சஞ்சய் சிங் 40 ஓட்டுக்களையும், அனிதா ஷெரான் வெறும் ஏழு ஓட்டுக்களையும் மட்டும் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷனுக்கு எதிராக மல்யுத்த வீரர்கள் போராடிய நிலையில், அவரது ஆதரவாளரே தற்போது வெற்றி பெற்றிருக்கிறார்.
மல்யுத்தம்
ஓய்வை அறிவித்த இந்திய மல்யுத்த வீராங்கணை சாக்ஷி மாலிக்:
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் புதிய தலைவராக முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷனின் ஆதரவாளரான சஞ்சய் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, மல்யுத்த விளையாட்டில் இருந்து ஓய்வை அறிவிப்பதாகத் தெரிவித்திருக்கிறார் சாக்ஷி மாலிக்.
கடந்த ஜூன் மாதம் மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷனுக்கு எதிராக இந்திய மல்யுத்த வீரர்கள் போராட்டத்தை அறிவித்த போது, புதிய தலைவரை மல்யுத்த வீரர்களின் ஆதரவுடனே புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என இந்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் உறுதியளித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மீண்டும் பிரிஜ் பூஷனின் ஆதரவாளரே தலைவாகியிருக்கும் நிலையில், மல்யுத்த விளையாட்டில் இந்தியாவிற்காக சர்வதேச அரங்கில் பல்வேறு பதக்கங்களை வென்று கொடுத்த சாக்ஷி மாலிக் இம்முடிவை எடுத்திருக்கிறார்.
கிரிக்கெட்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா பெண்கள் டெஸ்ட் போட்டி:
இந்திய பெண்கள் அணி மற்றும் ஆஸ்திரேலிய பெண்கள் அணி கலந்து கொள்ளும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியானது நேற்று (டிசம்பர் 21) தொடங்கி, டிசம்பர் 24ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.
முதல் நாளான நேற்று டாஸை வென்ற ஆஸ்திரேலிய பெண்கள் அணியின் கேப்டன் அலீஸா ஹேலி முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார்.
வான்கடே மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய பெண்கள் அணியை 77.4 ஓவர்களில் 219 ரன்களுக்குள் சுருட்டியது இந்திய பெண்கள் அணி.
அதனைத் தொடர்ந்து 19 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்களை இந்திய பெண்கள் அணி குவித்ததுடன் முதல் நாள் போட்டியானது முடிவுக்கு வந்தது.