Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் மோதிக் கொண்ட நான்காவது டி20 போட்டியில் வெற்றி பெற்று, ஆஸ்திரேலியாவுடனான டி20 தொடரையும் வென்றிருக்கிறது இந்தியா. சத்தீஸ்கரில் உள்ள ராய்பூர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்தார் ஆஸ்திரேலிய கேப்டன் மேத்யூ வேடு. முதலில் பேட் செய்த இந்திய அணியில் அனைத்து பேட்டர்களும் சற்று பங்களிக்க, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்களைக் குவித்தது. 175 என்ற இலக்கோடு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்களைக் குவித்து தோல்வியைத் தழுவியது ஆஸ்திரேலிய அணி.
சையது மோடி சர்வதேச பாட்மின்டன் தொடர்:
லக்னோவில் நடைபெற்று வரும் சையது மோடி சர்வதேச பாட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இந்திய வீரர் பிரியான்ஷூ ரஜாவத் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறார். காலிறுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இந்தோனேஷியாவைச் சேர்ந்த ஆல்வி பர்ஹானை 21-15, 21-16 என்ற நேர் செட் கணக்கில் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறார் அவர். அதேபோல் இத்தொடரின் பெண்கள் இரட்டையர் பிரிவில் தனிஷா கிராஸ்டோ மற்றும் அஸ்வினி பொன்னப்பா இணையானது, காலிறுதிச் சுற்றில் தங்களை எதிர்த்துப் போட்டியிட்ட டிரெஸ்ஸா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் இணையை 21-19, 21-8 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறது.
மீண்டும் ரஃபேல் நடால்:
உடம்பில் ஏற்பட்ட பல்வேறு காயங்களின் காரணமாக கடந்த ஒரு வருடமாக டென்னிஸ் விளையாட்டில் இருந்து விலகி இருந்த, 22 கிராண்டு ஸ்லாம் பட்டங்களை வென்ற டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடால் மீண்டும் டென்னிஸ் தொடர்களில் பங்கெடுக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறார். ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் வரும் ஜனவரி மாதம் நடைபெறவிருக்கும் பிரிஸ்பேன் சர்வதேச தொடரிலேயே காயத்திலிருந்து குணமாக பின்பு முதன் முதலாகக் கலந்து கொள்ளவிருப்பதாக தான் வெளியிட்ட காணொளி ஒன்றில் தெரிவித்திருக்கிறார் அவர். மேலும், அடுத்து நடைபெறவிருக்கும் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியிலும் அவர் கலந்து கொள்ளவிருப்பதாகத் தெரிகிறது. முன்னதாக, 2009 மற்றும் 2022 என இருமுறை ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை இவர் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் ஏலத்திற்கு பதிவு செய்த வீரர்கள்:
2024ம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல்லுக்கான ஏலம் வரும் டிசம்பர் 19ம் தேதி துபாயில் உள்ள கோகோ கோலா ஏரினாவில் நடைபெறவிருக்கிறது. இந்த ஐபிஎல் தொடரில் கலந்து கொள்வதற்காக 1,166 வீரர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். இவர்களில் 812 பேர் சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகாத இந்திய வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 10 ஐபிஎல் அணிகளிலும் மொத்தம் 77 இடங்கள் நிரப்பப்படவேண்டியிருக்கிறது. இந்த ஏலத்திற்காக, 2023 ஒருநாள் உலகக்கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணியில் விளையாடிய ஏழு வீரர்கள் ரூ.2 கோடி அடிப்படைய விலையில் தங்களைப் பதிவு செய்திருக்கிறார்கள். பேட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட், மிட்சல் ஸ்டார்க், ஜாஷ் ஹேசல்வுட், ஸ்டீவ் ஸ்மித், ஜாஸ் இங்கிலிஸ் மற்றும் சீன் அபாட் ஆகிய வீரர்கள் இந்த ஏலத்திற்கு பதிவு செய்திருக்கிறார்கள்.
மிட்சல் மார்ஷ் விளக்கம்:
கடந்த மாதம் நடைபெற்று முடிவடைந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆறாவது முறையாக சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது ஆஸ்திரேலிய அணி. அந்த உலக்கோப்பை வென்ற பின்பு, ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த மிட்சல் மார்ஷ் கோப்பையின் மீது கால் வைத்தபடி அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலானது. இந்திய ரசிகர்கள் பலரும் அதற்கு எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் தெரிவித்திருந்தனர். இது குறித்து ஆஸ்திரேலியாவின் சென் ரேடியாவில் பேசிய போது, அதனை தான் உலகக்கோப்பையை அவமதிக்கும் நோக்கத்துடன் செய்யவில்லை எனவும், மீண்டும் அதேபோல் செய்வதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார் அவர். கோப்பை மீது மிட்சல் மார்ஷ் கால் வைத்தபடி இருந்த புகைப்படம் தன்னையும் புண்படுத்தியதாக இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.