Sports Round Up: இந்திய அணியிலிருந்து ஷிவம் மாவி நீக்கம்; டயமண்ட் லீக்கில் நீரஜ் சோப்ரா தோல்வி; டாப் விளையாட்டு செய்திகள்
சீனாவில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டி செப்டம்பர் 23ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஷிவம் மாவி நீக்கப்பட்டுள்ளார். ஆசிய விளையாட்டில் ஆடவர் கிரிக்கெட் போட்டிகள் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 8 வரை டி20 கிரிக்கெட் வடிவில் நடைபெற உள்ளது. இதில் முதல் முறையாக இந்திய கிரிக்கெட் அணி பங்குபெறும் நிலையில், அதில் இடம் பெற்றிருந்த ஷிவம் மாவி முதுகு காயத்தால் அவதிப்படுவதால் போட்டியிலிருந்து நீக்கப்பட்டு, ஆகாஷ் தீப் மாற்று வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, மகளிர் கிரிக்கெட்டில் அஞ்சலி சர்வானிக்கு பதிலாக வீராங்கனைகளின் காத்திருப்பு பட்டியலில் ஒரு பகுதியாக இருந்த பூஜா வஸ்த்ராக்கர் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் காலிறுதியில் இந்திய வீரர் அபிமன்யு தோல்வி
உலக ஒருங்கிணைந்த மல்யுத்த கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்ட உலக சாம்பியன்ஷிப்பின் தொடக்க நாளில் சனிக்கிழமை (செப்டம்பர் 16) நடந்த போட்டியில் பங்கேற்ற நான்கு இந்திய ஃப்ரீ-ஸ்டைல் வீரர்களும் தோல்வியடைந்தனர். அபிமன்யுவைத் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் முதல் சுற்றோடு வெளியேறிய நிலையில், அபிமன்யு காலிறுதி வரை முன்னேறினார். காலிறுதியில் அமெரிக்க வீரர் ஜைன் ஆலன் ரெதர்ஃபோர்டிடம் அபிமன்யு தோல்வியைத் தழுவியதன் மூலம், உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் பதக்க வாய்ப்பு முடிவுக்கு வந்துள்ளது. இது 2024இல் நடைபெற உள்ள பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்று ஆட்டம் என்பதால், இதில் இந்திய வீரர்கள் ஒருவர் கூட வெற்றி பெறாதது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டி தடகள வாக்கெடுப்பில் சாய்னா நேவால் போட்டியின்றி தேர்வு
ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், வரவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான முதல் தடகள கமிட்டி வாக்கெடுப்பில் தெற்காசிய மண்டலத்தில் போட்டியின்றி வெற்றி பெற உள்ளார். வரலாற்றில் முதன்முறையாக ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் (OCA) தடகள கமிட்டியில் 10 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக விளையாட்டு வீரர்கள் மத்தியில் வாக்கெடுப்பை நடத்துகிறது. லண்டன் 2012 ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சாய்னா நேவாலின் பெயரும் இதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தெற்காசியா சார்பில் ஒரே வேட்பாளராக இருப்பதன் மூலம், 33 வயதான அவர் போட்டியின்றி வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 7ஆம் தேதி போட்டி முடிவடைவதற்கு முன்னதாக முடிவுகள் அறிவிக்கப்படும்.
அக்சர் படேலுக்கு பதில் வாஷிங்டன் சுந்தர்; பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னதாக காயமடைந்த அக்சர் படேலுக்கு பதிலாக ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரை இந்திய அணியில் சேர்த்துள்ளதாக பிசிசிஐ சனிக்கிழமை (செப்டம்பர் 16) அறிவித்துள்ளது. முன்னதாக, வெள்ளிக்கிழமை வங்கதேசத்திற்கு எதிராக நடந்த சூப்பர் 4 போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக இறுதிப்போட்டியில் இருந்து வெளியேறினார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி இலங்கையை எதிர்கொள்ள உள்ளது. இந்நிலையில், பிசிசிஐ வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், அக்சர் படேலுக்கு பதில் வாஷிங்டன் சுந்தரை அணியில் சேர்த்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதையடுத்து சனிக்கிழமை மாலை கொழும்புவில் உள்ள இந்திய அணியுடன் சுந்தர் இணைந்துள்ளார்.
டயமண்ட் லீக் போட்டியில் நீரஜ் சோப்ரா தோல்வி
சனிக்கிழமையன்று (செப்டம்பர் 16) நடந்த யூஜின் டயமண்ட் லீக் 2023 இறுதிப் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 2022இல் வென்ற தனது டயமண்ட் டிராபியைக் காக்க முடியாமல் தோல்வியடைந்தார். ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனான நீரஜ் சோப்ரா உள்ளிட்ட 6 பேர் பங்கேற்ற இறுதிப் போட்டியில், அவர் 83.80 மீட்டர்கள் எறிந்து இரண்டாவது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது. செக் குடியரசின் ஜேக்கப் வடிலேஜ்த் 84.24 மீட்டர்கள் தூரம் எறிந்து முதலிடம் பிடித்து டயமண்ட் டிராபியை வென்றார். இதனால் நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதலில் டயமண்ட் டிராபியை இரண்டாவது முறை தொடர்ச்சியாக வெல்லும் 3வது வீரர் என்ற சாதனை படைக்கும் வாய்ப்பை இழந்தார்.