சஞ்சய் சிங் தலைமையிலான இந்திய மல்யுத்த கூட்டமைப்பை இடைநீக்கம் செய்தது மத்திய அரசு
செய்தி முன்னோட்டம்
சஞ்சய் சிங் தலைமையிலான இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் புதிய அமைப்பு, மத்திய விளையாட்டு அமைச்சகத்தால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தற்போதுள்ள விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை முற்றிலும் புறக்கணித்ததை மேற்கோள் காட்டி ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 24) விளையாட்டு அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், தேசிய போட்டிகளுக்கான அறிவிப்பை அவசரகதியில் வெளியிட்டுள்ளதாகவும், உரிய நடைமுறை பின்பற்றப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
முன்னதாக, புதிய தலைவர் சஞ்சய் சிங், ஜூனியர் தேசிய போட்டிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கும் என்று டிசம்பர் 21 அன்று அறிவித்தார்.
இது விதிகளுக்கு எதிரானது என்றும், மல்யுத்த வீரர்கள் தயாராக இருக்க குறைந்தபட்சம் 15 நாள் அறிவிப்பு தேவை என்றும் அமைச்சகம் விவரித்துள்ளது.
Sanjay Singh lead WFI Suspended by Union Sports Ministry
பழைய நிர்வாகிகளின் தலையீடு
மத்திய விளையாட்டு அமைச்சகம் தனது அறிவிப்பில், மேலும், பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட முந்தைய அலுவலக பணியாளர்களின் முழு கட்டுப்பாட்டில் புதிய அமைப்பு இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளது.
"புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பு விதிகளை முற்றிலும் புறக்கணித்து முன்னாள் அலுவலகப் பணியாளர்களின் முழு கட்டுப்பாட்டில் இருப்பதாகத் தோன்றுகிறது" என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, சஞ்சய் சிங் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒலிம்பிக்கில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய சாக்ஷி மாலிக் மல்யுத்தத்தில் இருந்து விலகியுள்ளார்.
மேலும், பஜ்ரங் பூனியா, விஜேந்தர் சிங் போன்றோர் தங்கள் பதக்கங்களை திரும்ப அளிப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.