இந்தியாவுக்கு இனி கவலை இல்லை! மேற்கிந்தியத் தீவுகளை துவம்சம் செய்த தென்னாப்பிரிக்கா! இந்தியாவின் அரையிறுதிப் பாதை எளிதானது
செய்தி முன்னோட்டம்
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று (பிப்ரவரி 26, 2026) நடைபெற்ற டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றின் 47 வது போட்டியில், தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதின. விறுவிறுப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தப் போட்டியில், தென்னாப்பிரிக்க அணி ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மெகா வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்கா தனது பிரிவில் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டது.
மேற்கிந்திய தீவுகள்
நிலைகுலைந்த மேற்கிந்தியத் தீவுகள் பேட்டிங்
முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்குத் தொடக்கம் சாதகமாக அமையவில்லை. பிராண்டன் கிங் (21) மற்றும் ஷாய் ஹோப் (16) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன் பின் வந்த கேப்டன் ரோவ்மேன் பவல் மற்றும் ஹெட்மயர் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். இறுதியில் ஜேசன் ஹோல்டர் (49) மற்றும் ரொமாரியோ ஷெப்பர்ட் (52*) ஆகியோரின் அதிரடியால் அந்த அணி 20 ஓவர்களில் 176 ரன்களை எட்டியது. தென்னாப்பிரிக்க தரப்பில் லுங்கி என்கிடி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
தென்னாப்பிரிக்கா
மார்க்ரம் மற்றும் டி காக் அதிரடி
177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிக்கு, குயின்டன் டி காக் மற்றும் எய்டன் மார்க்ரம் ஜோடி மின்னல் வேகத் தொடக்கத்தைத் தந்தது. டி காக் 24 பந்துகளில் 47 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்த ரையான் ரிக்கெல்டன் (82*) மற்றும் மார்க்ரம் (45*) ஜோடி விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டது. அதிரடியாக ஆடிய அந்த அணி 16.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.
நிம்மதி
இந்தியாவுக்குக் கிடைத்த நிம்மதி
தென்னாப்பிரிக்காவின் இந்த மிகப்பெரிய வெற்றி இந்திய அணிக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இதற்கு முன்பு வரை ரன் ரேட் அடிப்படையில் இந்தியாவுக்குச் சிக்கல் இருந்தது. இதன் மூலம், இந்திய கிரிக்கெட் அணி எஞ்சிய இரண்டு போட்டிகளில் சாதாரணமாக வென்றாலே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும். ரன் ரேட் கணக்கீடுகளைப் பற்றி இனி கவலைப்படத் தேவையில்லை என்பது இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும். இதற்கிடையே, தற்போது மேற்கிந்தியத் தீவுகள் அணி தோல்வியடைந்துள்ளதால், இன்று இரவு நடக்கும் ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தென்னாப்பிரிக்கா அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிடும். ஜிம்பாப்வே அரையிறுதிக்கான வாய்ப்பிலிருந்து முழுமையாக வெளியேறிவிடும்.