ராணுவம் To பாரா விளையாட்டு; கண்ணிவெடியில் காலை இழந்த ராணுவ வீரரின் சக்ஸஸ் ஸ்டோரி
2013 இல் ஜம்மு காஷ்மீரில் உரி பகுதியில் நடந்த கண்ணிவெடி தாக்குதலில், இளம் ராணுவ வீரர் சோமேஸ்வர ராவ் முழங்காலுக்குக் கீழே தனது வலதுகாலை இழந்தாலும், கடுமையாக போராடி தற்போது பாரா விளையாட்டு வீரராக உள்ளார். முன்னதாக, சோமேஸ்வர ராவ் 2011 இல் இந்திய இராணுவத்தின் 11 வது மெட்ராஸ் ரெஜிமென்ட்டில் சேர்ந்தபோது, தனக்கு உரி செக்டரில் பணி வழங்கப்படும் என மிகுந்த ஆவலுடன் இருந்தார். ஆனால், அதற்கு பதிலாக, தேசத்தின் சிறந்த ராணுவ வீரர்களைக் கொண்ட ஒரு புகழ்பெற்ற படைப்பிரிவான கட்டக் படைப்பிரிவில் சேர்க்கப்பட்டார். அதன் பின்னர் 2013இல் உரியில் பணியாற்றியபோது, உரியில் ஒரு அகழியில் கண்ணிவெடி வெடித்தது குறித்து ஆய்வு செய்ய சென்றபோது கண்ணிவெடியில் சிக்கினார்.
லெப்டினன்ட் கர்னல் தத்தாவால் ஈர்க்கப்பட்ட சோமேஸ்வர ராவ்
அந்த சம்பவத்திற்கு பிறகு, வலிமிகுந்த பல நாட்களை கடந்த சோமேஸ்வர ராவ், தனது வாழ்க்கை முடிந்தது என நினைத்த நேரத்தில், லெப்டினன்ட் கர்னல் கவுரவ் தத்தாவின் தொடர்பு கிடைத்ததால், மீண்டு வந்தார். புனேவில் உள்ள செயற்கை மூட்டு மையத்தில் சிகிச்சைக்கு சென்றபோது கர்னல் தத்தாவின் தொடர்பு கிடைத்து, தத்தாவின் பாராலிம்பிக்ஸ் பயிற்சி மையத்தில் டிராக் அண்ட் ஃபீல்டில் விளையாடத் தொடங்கினார். சீனாவின் ஹாங்சோவில், இந்த ஆண்டு அக்டோபர் 22 முதல் 28 வரை பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க சோமேஸ்வர ராவ் தேர்வாகியுள்ளார். பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் விளையாட சோமேஸ்வர ராவ் உள்ளிட்ட 8 வீரர்கள் தத்தாவின் பயிற்சி மையத்திலிருந்து தேர்வாகியுள்ளனர்.